திருக்குறள் பாவம்
தமிழ்நாட்டில் ஓட்டு கேட்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு திருக்குறளாவது மேடையில் சொல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால், இங்குதான் மிகப்பெரிய ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது. முதல் அடியை ஒரு குறளில் இருந்தும், இரண்டாவது அடியை சம்பந்தமே இல்லாத வேறொரு குறளில் இருந்தும் எடுத்து ரீமிக்ஸ் செய்வார்கள்.
சில உள்ளூர் அரசியல்வாதிகள் குறளை சரியாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால், அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கிறதே! “அதாவது வள்ளுவர் என்ன சொல்றாருன்னா…” என்று ஆரம்பித்து, கட்சித் தலைமையைப் புகழ்வதற்கும், எதிர்க்கட்சியைத் திட்டுவதற்கும் திருக்குறளை வளைத்து நெளித்து முறுக்குவார்கள். இதைக் கேட்கும்போதெல்லாம், கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி வள்ளுவர் சிலை, கடலுக்குள் குதித்துவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்குக் கொடூரமாக இருக்கும்.
மொழிபெயர்ப்பாளர்களின் கிரியேட்டிவிட்டி
சமகால அரசியலில் மிகவும் ரசிக்கக்கூடிய ஒரு விஷயம், மேடை மொழிபெயர்ப்புகள்தான். தேசியத் தலைவர் ஒன்று பேச, உள்ளூர் மொழிபெயர்ப்பாளர் முற்றிலும் சம்பந்தமில்லாமல் இன்னொன்றை மொழிபெயர்த்துத் தள்ளுவார். தலைவர் மைக் வேலை செய்கிறதா என்று பார்க்க “Hello, Check” என்பார். நம்மவர் உடனே, “இந்தியா எங்களை உற்று நோக்குகிறது” என்று மொழிபெயர்ப்பார்.
சில நேரங்களில் தலைவரின் ஆங்கிலமோ, இந்தியோ மொழிபெயர்ப்பாளருக்குப் புரியாது. உடனே அவர் மனம் தளராமல், தலைவர் பேசுவதை அப்படியே நிறுத்திவிட்டு, தமக்குத் தெரிந்த கட்சிப் பிரசாரத்தை எல்லாம் “தலைவர் சொல்கிறார்…” என்ற பெயரில் அடித்து விடுவார். தலைவர் உணர்ச்சிவசப்பட்டு கை நீட்டிப் பேச, மொழிபெயர்ப்பாளரோ செத்த வீட்டில் இரங்கல் உரை வாசிப்பது போல் பேசுவதும் அரங்கேறும்.