வந்தே மாதரம் : `எந்த விவாதங்களுக்கும் நாங்கள் யாரும் பயப்படுவதில்லை' – கொந்தளித்த அமித் ஷா

Spread the love

இந்தியாவின் தேசியப் பாடலான `வந்தே மாதரம்’ பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிச.8) சிறப்பு விவாதம் நடைபெற்றது.

பிரதமர் மோடி, மக்களவையில் தனது உரை மூலம் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். அந்த உரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிரிவினையாற்றின. அந்தவகையில் ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்த விவாதத்தின்போது பேசிய திரிணாமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா, “அவையின் மாண்பைக் காக்க எம்.பி.க்கள் ‘ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்’ உள்ளிட்ட எந்த கோஷங்களும் எழுப்பக் கூடாது என மாநிலங்களவை செயலகம் 2 வாரங்களுக்கு முன்பு, செய்தி அனுப்பியது.

மஹுவா மொய்த்ரா

இப்போது திடீரென வந்தே மாதரம் பாடல் குறித்து 10 மணி நேரம் விவாதம் அரசால் நடத்தப்படுகிறது. ஏன்? என்ற காரணத்தையும் நான் சொல்கிறேன். இதைச் செய்தால் மேற்கு வங்கத் தேர்தலில் வெல்லலாம் என பாஜக ஐ.டி. விங் அரைகுறைகள் யாராவது ஐடியா கூறியிருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தே மாதரம் குறித்த விவாதத்தை தொடங்கினார். அப்போது,“ வந்தே மாதரம் குறித்த இந்த விவாதங்களின் அவசியம் குறித்து மக்களவையில் சில உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.

வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு இப்போது தேவைப்படுகிறது. 2047-ம் ஆண்டுக்கான நாம் கற்பனை செய்துள்ள பிரகாசமான எதிர்காலத்திற்கு, இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

மேற்கு வங்க தேர்தல்கள் காரணமாக இந்த விவாதங்கள் நடத்தப்படுவதாக சிலர் நினைக்கிறார்கள். இந்த விவாதங்களை தேர்தல்களுடன் தொடர்புபடுத்துவதன் மூலம், நமது தேசியப் பாடலின் மகிமையை அவர்கள் குறைத்து மதிப்பிட விரும்புகிறார்கள். வந்தே மாதரத்தை இயற்றிய பங்கிம் பாபு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பது உண்மைதான், ஆனந்த் மடம் நூல் வங்காளத்தில் தோன்றியதுதான்.

அமித் ஷா
அமித் ஷா

இதில் எந்த மாற்றும் இல்லை. ஆனால் வந்தே மாதரம் வங்காளத்திற்கு மட்டும் என சுருக்கப்படவில்லை. நாட்டின் எல்லையில் ஒரு இராணுவ வீரரோ, அல்லது நாட்டை உள்ளே இருந்து பாதுகாக்கும் ஒரு காவல்துறை அதிகாரியோ தனது உயிரைத் தியாகம் செய்யும்போது, ​​வந்தே மாதரம் மட்டுமே துணை. வந்தே மாதரம் குறித்த விவாதம் ஒரு அரசியல் உத்தி, பிரச்சினைகளை திசைதிருப்பும் ஒரு வழி என காங்கிரஸ் கூறுகிறது. பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்கு நாங்கள் யாரும் பயப்படுவதில்லை.

நாங்கள் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கவில்லை. எல்லா விவாதங்களும் நடக்கும். நாங்கள் எதையும் கண்டு பயப்படவோ அல்லது மறைக்கவோ முயற்சிக்கவில்லை. எந்தப் பிரச்சினையிலும் நாங்கள் விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம்.

ஜவஹர்லால் நேரு தேசியப் பாடலை இரண்டு சரணங்களுக்குள் சுருக்கினார். வந்தே மாதரம் மட்டுப்படுத்தப்பட்டபோதுதான் நாட்டு விஷயத்தில் சமரசம் தொடங்கியது.

ராகுல் காந்தி

அந்த சமரசம் நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தது. காங்கிரஸ் வந்தே மாதரத்தைப் பிரிக்கவில்லை என்றால், நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்காது. வந்தே மாதரம் 100 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, ​​அவசரநிலை விதிக்கப்பட்டது. தேசியப் பாடலைப் புகழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. வந்தே மாதரம் என்ற முழக்கத்தைப் பிரச்சாரம் செய்து எழுப்பியவர்களை இந்திரா காந்தி சிறையில் அடைத்தார்…

நேற்று மக்களவையில் விவாதங்கள் நடைபெற்றபோது, ​​காந்தி குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் அவையில் இல்லை. ஜவஹர்லால் நேரு முதல் தற்போதைய தலைமை வரை, காங்கிரஸ் வந்தே மாதரத்தை தொடர்ந்து எதிர்க்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *