வன்னியர்கள் மீதான வன்மத்தாலேயே உள் இடஒதுக்கீடு வழங்க திமுக மறுக்கிறது: ராமதாஸ் | Ramadoss slams dmk government over vanniyar reservation

1288685.jpg
Spread the love

சென்னை: வன்னியர்களால் வளர்ந்த திமுக, இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது என்றும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக தரவுகள் இல்லை என்று கூறி அரசு ஏமாற்றுகிறது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு ஜூலை 11 ஆம் நாளுடன் முடிவடைந்து விட்ட நிலையில், காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணையிட்டிருக்கிறது. வன்னியர்களுக்கான சமூகநீதியை மறுக்க அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் இந்த நாடகம் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்பின் 10 மாதங்கள் கழித்து 12.01.2023 ஆம் நாள் வன்னியர்களுக்கு உள் இடஓதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது.

ஆனால், வழங்கப்பட்ட கெடுவுக்குள் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்யாத நிலையில், அடுத்தடுத்து 6 மாதங்கள், 3 மாதங்கள், 6 மாதங்கள் என மேலும் 15 மாதங்களுக்கு கூடுதல் காலக்கெடு வழங்கப் பட்டது. ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்ட 18 மாதக் கெடுவும் ஜூலை 11 ஆம் நாளுடன் முடிந்துவிட்டது. இப்போதும் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் தான் ஓராண்டு கூடுதல் கெடு வழங்கப்பட்டுள்ளது.

காலக்கெடுவை நீட்டிப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறியிருக்கும் காரணங்களும், அதை எதிர்கேள்வி கேட்காமல் அரசு ஏற்றுக் கொண்டிருப்பதும் தான் வியப்பளிக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து சமூகங்களின் சாதிவாரி விவரங்கள் இல்லாததால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க இயலவில்லை என்றும், அந்தப் பணிகளை முடிக்க மேலும் ஓராண்டு காலக்கெடு தேவை என்று ஆணையம் கோரியதாகவும், அந்தக் கோரிக்கையை கவனமாக பரிசீலித்து காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டித்திருப்பதாகவும் தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது.

வன்னியர் உள் இடஒதுக்கீடு பற்றி சட்டமன்றத்தில் பா.ம.க. குழு தலைவர் ஜி.கே.மணி எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுக்க வேண்டும் என்றும், சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் இல்லாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறினார். ஆனால், இப்போது வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஓராண்டுக்குள் அறிக்கை அளிப்பதாக ஆணையம் கூறியிருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும் போது சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும்.

1. சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் தமிழக அரசிடம் இல்லை; அவற்றைத் திரட்ட மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் தயாராக இல்லை எனும் போது, எந்த அடிப்படையில் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்த அறிக்கையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இறுதி செய்யும்?

2. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைவதற்குள் தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறதா?

3. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தீர்மானித்திருக்கிறதா?

4. இவை எதுவுமே இல்லை என்றால், எந்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டது? கால நீட்டிப்பு கோருவதற்காக ஆணையம் கூறிய காரணம் என்ன?

5. ஆணையம் எந்தக் காரணமும் கூறவில்லை என்றால், காலநீட்டிப்பு வழங்கப்பட்டது ஏன்? ஆணையம் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடும் அளவுக்கு அரசு பலவீனமடைந்து விட்டதா?

6. வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் அது என்னென்ன பணிகளைச் செய்யும்?

அரசாணை பிறப்பிக்கக் கோரி அரசுத்துறை செயலாளருக்கு துறை சார்ந்த அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் அனுப்பப்பட்டால், அதை பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவைப்பட்டால் முதலமைச்சர் நிலை வரை ஒப்புதல் பெற்று தான் அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். அப்போது கோரிக்கைகளை ஏற்பது குறித்து கோரிக்கைகளை முன்வைத்தவரிடம் பல்வேறு வினாக்கள் எழுப்பப்படும். மேலும் ஓராண்டு காலக்கெடு கோரி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரிய நிலையில்,

1. வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க இதுவரை வழங்கப்பட்ட ஒன்றரை ஆண்டு காலக்கெடுவில் நீங்கள் மேற்கொண்ட பணிகள் என்னென்ன?

2. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து இடைக்கால அறிக்கை இதுவரை தாக்கல் செய்யாதது ஏன்?

3. முதல் கட்டமாக 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு வழங்கப்பட்ட நிலையில், அதன்பின் அதைவிட அதிகமாக 6 மாதங்கள் காலநீட்டிப்பு கோரிய ஆணையம், இப்போது அதைவிட இன்னும் கூடுதலாக ஓராண்டு காலக்கெடு கோருவது ஏன்?

என்பன போன்ற வினாக்களை தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த எதிர்வினாவும் கேட்காமல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியவாறே ஓராண்டு காலநீட்டிப்பை அரசு வழங்கியுள்ளது.

மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்த நிலைப்பாட்டின்படி தமிழக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை; மத்திய அரசும் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை. இவை நடக்காத நிலையில், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையத்திற்கு காலக்கெடு நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை. இது அரசுக்கும், ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும் நீ அடிப்பது போல அடி, நான் அழுவதைப் போல அழுகிறேன் என்று தமிழக அரசும், ஆணையமும் இணைந்து வன்னியர் சமூகநீதிக்கு எதிராக நாடகமாடுகின்றன.

இன்னொருபுறம் வன்னியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த தரவுகளே இல்லை என்று ஆணையம் கூறுகிறது. ஆனால், வன்னியர்கள் 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் கூறுகிறார்.

அப்படியானால் ஆணையம் கூறுவது பொய்யா? அமைச்சர் கூறுவது பொய்யா? அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட முதல் தொகுதி தேர்வுகளில் கூட வன்னியர்களுக்கு 5%க்கும் குறைவான பிரதிநிதித்துவம் தான் கிடைத்திருக்கிறது. இது உள்ளிட்ட அனைத்துத் தரவுகளும் தமிழக அரசிடமும், ஆணையத்திடமும் உள்ளன. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக தரவுகள் இல்லை என்று கூறி அரசு ஏமாற்றுகிறது. அதன் நாடகத்திற்கு ஆணையமும் துணைபோகிறது.

வன்னியர்களால் வளர்ந்த திமுக, இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. திமுகவின் இந்த நாடகங்களை உழைக்கும் பாட்டாளி மக்கள் நன்றாக அறிவார்கள். காலம் வரும் போது சமூகநீதிக்கு எதிரான, நன்றி மறந்த திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *