வன்னியர் இடஒதுக்கீடு பற்றி அமைச்சருக்கு அரைகுறை புரிதல்: வழக்கறிஞர் கே.பாலு குற்றச்சாட்டு | Minister has incomplete understanding about Vanniyar reservation: Lawyer Balu

1348877.jpg
Spread the love

விக்கிரவாண்டியில் வன்னியர் இடஒதுக்கீடு பற்றி மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி குறித்து அரைகுறை புரிதல் உள்ள அமைச்சர் ராஜேந்திரனுக்கு தெரியவில்லை என்று பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பாமக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக வரலாற்றில் வன்னியர்களுக்கு மிக அதிக துரோகம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்ற உண்மையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அம்பலப்படுத்தியதை சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலிருக்கிறது. அதனால் தான் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் நிரைவேற்றியிருக்கிறார். அது இமாலய சாதனையல்லவா? என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திரனின் புலம்பல்களுக்கெல்லாம் காரணம் அரைகுறையான புரிதல்கள் தான். வன்னியர் இட ஒதுக்கீட்டில் அமைச்சர் ஆனாலும், அதுகுறித்த வரலாறுகளை முழுமையாக படித்துத் தெரிந்து கொள்வதில்லை. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அவர்கள் கட்சித் தலைவர் 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது என்ன சொன்னார்? என்பதையும் முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைகுறையாக தெரிந்து கொண்டிருப்பது தான் இத்தகைய உளறல்களுக்கு காரணம் ஆகும்.

‘‘எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்ததும் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என 2019 அக்டோபர் 7-ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்து அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். எதிர்க் கட்சித் தலைவராக இருந்த போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எல்லாம் தமிழக அரசியலில் இதுவரை நடக்காத நிகழ்வு’’ என்று சிலாகித்து பேசியிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரன். அவரது அரைகுறை புரிதலுக்கு இதைவிட சிறந்த எடுத்துக் காட்டு வேறு எதுவும் இருக்க முடியாது.

அதே விக்கிரவாண்டி பரப்புரையில் மு.க.ஸ்டாலின் வேறு ஒன்றையும் கூறினார். அவரது புரிதலுக்காக அந்த செய்தியை நானே தெரிவிக்கிறேன். ‘‘ஏற்கனவே கருணாநிதி தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு அமைந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்பது தான் அந்த வாக்குறுதி. வன்னியர் என்பதற்காகத் தான் ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதை அவர் மறந்து விடக்கூடாது. அடுத்து நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டை இன்னும் ஏன் வழங்கவில்லை? என்று அவர் வினா எழுப்ப வேண்டும். அதுதான் அவருக்கு பெருமையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *