வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 அரசுப் பணிகளுக்கு 4,00,000 பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதில், 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் வம்சாவழியினருக்கு 30 சதவீதமும், பின்தங்கிய மாவட்டங்களுக்கும், பெண்களுக்கும் தலா 10 சதவீதமும், சிறுபான்மை இனத்தவருக்கு 5 சதவீதமும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டின் உயர்நிலை அரசுப் பணிகளுக்கு தகுதியுள்ள மாணவர்கள் பணியமர்த்தப்படுவதை தற்போதுள்ள இந்த இட ஒதுக்கீட்டு முறை தடுப்பதாகவும், இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தங்கள் கோரியும் மாணவர்கள் நடத்தி வந்த நாடு தழுவிய போராட்டத்தில் திங்கள்கிழமை வன்முறை வெடித்தது.
அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது நாட்டில் ஆளும் அவாமி கட்சியின் மாணவர் அணி காவல்துறை உதவியுடன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெடித்த வன்முறையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கதேசத்தில் இடஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவா்கள் போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து அந்நாட்டில் உள்ள இந்தியா்கள் வெளியே செல்வதைத் தவிா்க்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை மேற்கோள் காட்டி, கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் சனிக்கிழமையும், கொல்கத்தா மற்றும் குல்னா இடையே பந்தன் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமையும் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.