சென்னை: தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம், கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 16 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து 2024-25 கல்வியாண்டில் எழுதப் படிக்க தெரியாதோர் அனைவரையும் 100 சதவீதம் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கும் விதமாக 2 கட்டங்களாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, முதல்கட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட 6.14 லட்சம் நபர்களில் 5.09 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில் 30,113 மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் தன்னார்வலர்கள் உதவியுடன் 200 மணி நேர கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், பயிற்சி தரப்பட்ட 5 லட்சத்து 9,459 கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நேற்று காலை 10 முதல் 5 மணி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
வேலைக்கு செல்லும் கற்போருக்கு வசதியாக அவர்கள் இடத்திலோ அல்லது மாற்றுத்திறனாளி, மூத்த கற்போராகவோ இருப்பின் அவர்கள் இல்லங்களிலோ இந்த தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து திட்டத்தின் 2-ம் கட்டம் இந்த மாதம் இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை செயல்படுத்தப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.