கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று (நவ. 13) இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
இந்தத் தேர்தல் குறித்து காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “வயநாட்டில் உள்ள சகோதர, சகோதரிகளே, உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. நீங்கள் அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்களின் உரிமையைப் பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் வாக்குகள்தான் நமது ஜனநாயகத்தின் பலம். வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.