பாராளுமன்ற தேர்தலில் காங்கிஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கருத்துகணிப்புகளை பொய்யாக்கி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜனதாவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் கட்சி எம்.பிக்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல்காந்தி
பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி ரேபரேலி, கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் அவர் எந்த தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று பெரும் எதிர்பார்ப்பாக எழுந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல்காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வயநாடு தொகுதி ராஜினாமா
இந்த நிலையில்வயநாடு தொகுதியை ராஜினாமாசெய்வதாக ராகுல் காந்தி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
மேலும் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேர்தலில் முதல் முறையாக பிரியங்கா காந்தி களம் இறங்க உள்ளார். தேர்தல் மற்றும் அரசியலில் பிரியங்கா காந்தி அடியெடுத்து வைப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
பிரியங்கா காந்தி போட்டி
இதுதொடர்பாக ராகுல்காந்தி கூறும்போது, ரேபரேலி மற்றும் வயநாடு ஆகியவற்றுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு எம்.பி.யாக இருந்தேன். அங்கு எல்லோரும் என்னை மிகவும் நேசித்தார்கள். கடந்த 5 ஆண்டுகளில் வயநாடு மக்கள் என்னுடன் நின்று, மிகவும் கடினமான நேரத்தில் போராடும் ஆற்றலை எனக்கு அளித்தனர்.
இதற்காக அனைவருக்கும் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.பிரியங்கா வயநாட்டில் தேர்தலில் போட்டியிடுகிறார். வயநாடுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றாக நிறைவேற்றுவோம்.பிரியங்கா தேர்தலில் வெற்றி பெற்று வயநாடு மக்களின் சிறந்த பிரதிநிதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.எனது வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன் என்றார்.
இதையும் படியுங்கள்: