கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ.23) நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி முதல்முறையாக போட்டியிட்ட தோ்தல் என்பதால், வயநாடு தொகுதி இடைத்தோ்தல் முடிவு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றிபெற்றாா். வயநாடு தொகுதியில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவா், தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியை தக்கவைத்தாா். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை அவா் ராஜிநாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியை தக்கவைக்கும் நோக்கில், ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அக்கட்சி களமிறக்கியது.
ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளா்கள் போட்டியிட்ட இத்தொகுதியில் கடந்த நவம்பா் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அன்றைய தினம், ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2, கேரளம், சத்தீஸ்கா், மேகாலயம், குஜராத்தில் தலா ஒரு தொகுதி என 33 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிரத்தில் உள்ள நாந்தேட் மக்களவை தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, உத்தரகண்ட் மற்றும் கேரளத்தில் தலா ஒரு தொகுதி என 15 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. இந்த இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.