வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவுடன், அவரது தாய் சோனியா, கணவர் ராபர்ட் வதேரா, சகோதரர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்ய, சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியுடன், பிரியங்கா, ஊர்வலமாக வந்து, மக்களிடையே உரையாற்றினார். பின்னர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரியங்கா காந்தி, முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். தொடர்ந்து இன்று மாலையும் வயநாடு தொகுதியில் பிரசாரம் நடைபெறவிருக்கிறது.
வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பிரியங்கா தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொள்வாா் எனத் தெரிகிறது.
மக்களவைத் தொகுதியில் உத்தர பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, அத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.