வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்! – முதல்வர் கடும் விமர்சனம் | Stalin says Some who don’t know history are threatening us

Spread the love

கட்சி தொடங்கியதும் அடுத்த முதல்வர் என்று அறிவித்து ஆட்சிக்கு வரவில்லை. வரலாறு தெரியாமல் திமுகவை வீழ்த்திவிடலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுகவின் 75-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி திமுக இளைஞரணி சார்பில் ‘திமுக -75 அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முற்போக்கு புத்தகக் காட்சி, ‘இருவண்ண கொடிக்கு வயது 75’ இரண்டு நாள் கருத்தரங்கம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். திமுகவின் 75 ஆண்டு கால வரலாறு குறித்த 1,120 பக்கங்களுடன் கூடிய ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலையும் அவர் வெளியிட்டார்.

பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: சாமானியர்களால் தொடங்கப்பட்டு 1967-ல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கட்சி திமுக. ஏதோ கட்சியைத் தொடங்க வேண்டும், அடுத்த முதல்வர் நான்தான் என்று அறிவித்து திமுக ஆட்சிக்கு வரவில்லை. கட்சியின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடித் தொண்டர் வரை சுற்றிச்சுழன்று பணியாற்றி 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். எத்தனை கூட்டங்கள், போராட்டங்கள், சிறைவாசங்கள், தியாகங்கள், துரோகங்கள்.

இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது. சரிபாதி மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருந்த காலகட்டத்தில் இருந்து சைக்கிள் கடை, டீ கடை என ஒரு இடம் விடாமல் மக்களின் சிந்தனையைத் திருத்தும் மையமாக திமுக செயல்பட்டிருக்கிறது. திமுக பெற்ற வெற்றி, இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை. இந்த வரலாற்றையெல்லாம் பற்றி தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் திமுகவை வீழ்த்தி வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கின்றனர்.

திமுக-வை வீழ்த்தி வெற்றிபெற திமுக-வைப் போல் உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுக தான். திமுக பேசும் சமூக நீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி இன்றைக்கு இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலே திமுகவின் 75 ஆண்டு கால வரலாற்றையும், சாதனைகளையும் சொல்லும். இதில் திராவிட இயக்கத்துக்கு சார்பானவர்கள் மட்டும் அல்ல, திராவிட இயக்கத்தை விமர்சிப்பவங்களும் கூட கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

சோனியா காந்தி முதல் அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் தங்கள் பார்வையில், திமுக-வை அளவிட்டிருக்கின்றனர். ஒரு மாநிலக் கட்சியை, அகில இந்தியத் தலைவர்களும், மற்ற மாநிலத் தலைவர்களும் புகழ்ந்து எழுதுவது சாதாரணமாக நடப்பதில்லை. இத்தனை கட்டுரையாளர்களின் பார்வைகளை இப்படி ஒரு புத்தகமாக உருவாக்கியிருப்பது மிகவும் சிறப்பானது. இந்த புத்தகத்தை எல்லோரும் படிக்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தையும், தமிழகத்தின் எதிர்காலத்தையும் காக்க 2019 முதல் தொடரும் பயணம் 2026 தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறும். பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலினின் கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை, தமிழகம் தலைகுனியாது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, திருச்சி என்.சிவா எம்.பி, தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மேயர் பிரியா, இந்து என்.ராம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உதயநிதிக்கு அன்புக் கட்டளை… விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ இந்த அறிவுத் திருவிழா நிகழ்ச்சிக்காக கடந்த ஒருமாத காலமாக மும்முரமாக ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதிக்கு பாராட்டுக்கள். நான் நினைத்ததைவிடச் சிறப்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறார்.

உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்” என்ற குறளுக்கேற்ப அவர் செயல்படுகிறார் என்பதை பெருமையுடன் சொல்வேன்.

அந்த பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். ஏன்? இது என் அன்புக் கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவு திருவிழாவை நீங்கள் இத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து ஆண்டு தோறும் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *