தங்கம் விலை எதை நோக்கி இவ்வளவு வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்பது ஒன்றும் புரியவில்லை.
இந்த ஆண்டு அதாவது 2026-ம் ஆண்டு, தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 5,000 டாலர்கள் வரை செல்லும் என்று சில பொருளாதார நிபுணர்களும், நிறுவனங்களும் கணித்திருந்தனர். இது வரலாற்று உச்சம் ஆகும்.
ஆனால், இந்த ஆண்டு தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள்ளேயே இந்த உச்சத்தைத் தொட்டுவிட்டது தங்கம்.
வெள்ளி விலையுமே ஒரு அவுன்ஸிற்கு 100 டாலர்களைத் தாண்டிவிட்டது. இதுவும் வரலாற்று உச்சம் ஆகும்.

கடந்த வாரம் முழுவதும், உலக அரசியலில் பஞ்சத்திற்கு பரபரப்பு இல்லாமல் இருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு மிரட்டல் விடுப்பது… கனடாவிற்கு எச்சரிக்கை விடுப்பது… கிரீன்லேண்டிற்கு வைத்த குறி என பட்டியல் நீண்டுகொண்டே இருந்தது.
இன்னொரு பக்கம், அமெரிக்க டாலரின் மதிப்பும் சற்று ஆட்டம் கண்டது.
இதனால், முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து தங்களது முதலீடுகளைத் தங்கத்தின் பக்கம் திருப்பினர்… திருப்பி வருகின்றனர். உலக மத்திய வங்கிகளும் தங்கம் வாங்கிக் குவித்து வருகின்றன. ஆக, இது தங்கம், வெள்ளி விலையை உயர்த்தி இருக்கிறது.