சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்துக்குப் பெயர் போன வேளச்சேரியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் துயரமடைந்துள்ளனர்.
வேளச்சேரி, நேருநகர், காமராஜர் தெரு, நேதாஜி ரோடு உள்ளிட்டப் பகுதிகளில் தற்போது இடுப்பளவுக்குத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதனால், மக்கள் சாலைகளில் நடந்து செல்லவும், வாகனங்களை ஓட்டிச்செல்லவும் இயலாமல் அவதியடைந்துள்ளனர்.
சாலையில் செல்லும் கார்கள் பாதியளவுக்கு மேல் மூழ்கும் சூழ்நிலையும் தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் சூழம் நிலையில் மக்கள் அடுத்து என்ன நடக்குமோ? கடந்த கால வெள்ளம் சூழ்ந்த வரலாறுகளை புதுப்பிக்குமோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்குக் காரணம், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வெள்ள நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதே என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு வெள்ள நீர் செல்லும் பங்காரு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால், இந்தப் பகுதிகளிலிருந்து மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பங்காரு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், 5க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கால்வாயில் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு பங்காரு கால்வாய் வழியாகத்தான் 50 கிராமங்களில் பெய்த மழை நீர் செல்லும் என்பதால் வேளச்சேரியில் தண்ணீர் வடிய வழியில்லாமல், வெள்ளம் சூழ்ந்துள்ளது.