முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த “வரித்துணையே..!’.
காதலர் தினம் ஸ்பெஷலாக முதலில் ‘நீ கவிதைகளா’ பாடல் பற்றி உரையாட பாடலாசிரியர் ஜிகேபி-யின் வீட்டு கதவைத் தட்டினோம். வாஞ்சையுடன் வரவேற்று மலர்ந்த சிரிப்புடன் ‘நீ கவிதைகளா’ பாடல் பற்றி விவரிக்கத் தொடங்கினார்….
“எப்போதும் ஒவ்வொரு பாடலுக்கும், அது இடம்பெறும் சூழலை இயக்குநர்களோ, இசையமைப்பாளர்களோ விளக்கி விடுவார்கள். ஆனால், ‘நீ கவிதைகளா’ பாடலைப் பொறுத்தமட்டில், பாடலை முன்பே மான்டேஜ்களாக படம்பிடித்துவிட்டார்கள். நான் எழுதத் தொடங்குவதற்கு முன் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும், இயக்குநர் சரவணனும் ‘கதாநாயகியிடம் கதாநாயகன் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பே, அவனின் வாழ்விலிருந்து அவள் விலகிச் சென்றுவிடுகிறாள்’ என்பதை மட்டுமே சொன்னார்கள்.
இதை அவர்கள் விளக்கி முடித்ததுமே எனக்குள் ‘நீ கடந்ததுவா, நிகழ்ந்ததுவா, பதில் மொழியே’ வரிகள் தோன்றிவிட்டன. திபு நினன் தாமஸ் எப்போதும், பாடலாசிரியர்களிடம் வரிகளைக் கேட்டு வாங்குவார்.