“வரி தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்” – முதல்வர் ஸ்டாலின்  | cm stalin speech in cuddalore

1351701.jpg
Spread the love

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் மறந்துவிடாதீர்கள். கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சித் தத்துவம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “பெண்கள் கல்வி – வேலைவாய்ப்பு பெற்று, வாழ்க்கையில் முன்னேற ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மகளிர் முன்னேற்றத்திற்கு சிறிய தடை கூட ஏற்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதனால்தான், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனே, விடியல் பயணம் திட்டத்தை செயல்படுத்தினேன்.

இது போன்ற திட்டங்கள், தேவையுள்ள அத்தனைப் பேருக்கும் பாகுபாடு இல்லாமல் கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான், மகளிருக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தில், அடுத்ததாக, திருநர்கள் – மாற்றுத் திறனாளிகள் – அவர்களின் துணையர் என்று எல்லோருக்கும் விடியல் பயணத்தின் பயனை வழங்கினோம்.

அதேபோன்றுதான், வறுமையின் அடையாளமல்ல. பெருமையின் அடையாளமாக விளங்கும் நம்முடைய அரசுப் பள்ளி மாணவ – மாணவியர் கல்வியில் உயர்ந்து நிற்கவேண்டும். அவர்களுக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைக்கவேண்டும் என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

காலையிலேயே பள்ளிக்கு வரும் குழந்தைகள் வயிற்று பசியோடு இருக்க கூடாது என்று காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தோம். அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குப் போகும் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஆண்டுக்கு பன்னிரெண்டாயிரம் ரூபாய் வழங்குகிறோம்.

நம்முடைய மாணவர்கள் வகுப்பறைக் கல்வியைத் தாண்டி தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு, பெரிய பெரிய வேலைகளுக்கு செல்ல வேண்டும்; தங்களின் குடும்பங்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ‘நான் முதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

படிக்கக் கூடாது, பள்ளிக் கூடங்களை மிதிக்கக் கூடாது, வேலைகளை அடையக் கூடாது என்று 100 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் நம்முடைய மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். வகுப்புவாரி உரிமை என்று சொல்லும் சமூகநீதியை உருவாக்கி பட்டியலின மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், கல்விச் சாலையின் கதவைத் திறந்து வைத்தோம்.

இன்றைக்கு இவ்வளவு பேர் படிக்கவும் வேலைகளைப் பெறவும் அதுதான் அடித்தளம் அமைத்தது. அந்த சமூகநீதியை சிதைக்கத்தான் தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலமாக, தமிழ்நாட்டு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் தடுக்கப்படும். மீண்டும் கல்விச் சாலைகளுக்குள் வரவிடாமல் தடுக்கப்படுவார்கள்.

இது போன்ற ஏராளமான தடைகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நேற்றைய தினம், நம்முடைய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நான் கடிதம் எழுதினேன்.

அதற்கு இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறார். நான் கேட்கிறேன். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான், கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியைத் தருவோம் என்று ‘ப்ளாக்மெயில்’ செய்வதற்கு பெயர் என்ன? அரசியல் இல்லையா?

கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிப்பது அரசியல் இல்லையா? பல மொழிகள் கொண்ட இந்திய நாட்டை – ஒரு மொழி நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா?

பல்வேறு மொழி பேசும் இன மக்கள் வாழும் நாட்டை, ஒற்றை இன நாடாக மாற்ற நினைப்பது அரசியல் இல்லையா? ஒரு திட்டத்திற்கான நிதியை, மற்றொரு திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனையாக மாற்றுவது அரசியல் இல்லையா?

நீங்கள் செய்வது அரசியலா? இல்லையா? என்பதை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அரசியல் செய்வது நீங்களா? நாங்களா? மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசின் நிதியை செலவு செய்பவர்கள் நாங்கள். அரசின் நிதியை மதவெறிக்காகவும் இந்தி – சமஸ்கிருத திணிப்புக்காகவும் செலவு செய்பவர்கள் நீங்கள்.

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு 5,000 கோடி ரூபாய் இழக்கிறது என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே, தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் மறந்துவிடாதீர்கள். கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சித் தத்துவம். அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை. அதைகூட புரிந்துக்கொள்ளாதவர்கள் ஒன்றியத்தை ஆள்வதுதான் இந்தியாவுக்கே மிகப்பெரிய சாபக்கேடு!

தேசியக் கல்விக் கொள்கை என்பதே, கல்வியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. இந்தியை வளர்க்க கொண்டு வரப்பட்டிருக்கிறது. நேரடியாக திணித்தால் எதிர்ப்பார்கள் என்று, கல்விக் கொள்கை மூலமாக முலாம் பூசி திணிக்கிறார்கள். தாய் மொழியை வளர்க்கப் போவதாக ஒன்றிய அமைச்சர் சொல்கிறார்.

தர்மேந்திர பிரதான் அவர்களே, தாய்மொழித் தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும். இந்தி மொழியால் தங்களின் தாய்மொழிகளை தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் சதி திட்டத்தின் ஆபத்து புரியும். நீங்கள் வந்துதான் வளர்ப்பீர்கள் என்று தமிழ் உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை.

ஒன்றிய அரசுக்கு நான் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறேன். தேன் கூட்டில் கல் எறியாதீர்கள். தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்கவேண்டும் என்று ஆசை படாதீர்கள்! தமிழுக்கும் – தமிழ்நாட்டுக்கும் – தமிழினத்துக்கும் எதிரான எந்தச் செயல்பாடுகளும் நான் இருக்கும்வரைக்கும், திமுக இருக்கும் வரைக்கும் நிச்சயம், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரைக்கும் இந்த மண்ணுக்குள் வர முடியாது” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *