"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" – கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

Spread the love

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது.

இதனைத் தொடர்ந்து இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் நடைபெறவுள்ளது.

வருண் சக்கரவர்த்தி - குல்தீப்
Ind vs SA

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஷ்வின், வருண் சக்ரவர்த்தியை இந்தப் போட்டியில் அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், “வருண் சக்கரவர்த்தியை நாம் இந்தத் தொடரில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.

அவரைப் பாதுகாத்து வைக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து விளையாடவுள்ளோம்.

அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையிலும் இந்த அணிகளை நாம் சந்திக்க நேரிடும்.

அதனால், இப்போதே அவரை அதிகம் ஆட வைத்தால், எதிரணிகள் அவரது பந்துவீச்சு நுணுக்கங்களைக் கணித்துவிடுவார்கள்.

வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் உலகக்கோப்பையில் ஒன்றாக இணைந்து ஆடுவார்கள் என்று நினைக்கிறேன்.

வருண் சக்கரவர்த்தி - குல்தீப்
வருண் சக்கரவர்த்தி – குல்தீப்

அது ஒரு பயங்கரமான கூட்டணியாக இருக்கும். ஆனால், இப்போதே அவர்கள் இருவரையும் ஒன்றாக ஆட வைத்து, எதிரணிகளுக்குப் பழக்கப்படுத்திவிடக் கூடாது.

எதிரணிகள் அவர்களைக் கணிப்பதற்கு நாம் நேரம் கொடுக்கக் கூடாது. அவர்கள் வருணுக்கு எதிராக எவ்வளவு அதிகமாக ஆடுகிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் அவரது பந்துவீச்சைப் புரிந்து கொள்வார்கள்.

மர்மம் என்பது மர்மமாகவே இருக்க வேண்டும்” என்று அஷ்வின் கவுதம் கம்பீருக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *