விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-21 வரை எம்எல்ஏவாகப் பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். அதே காலத்தில் அவரது கணவரான பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக இருந்தார்.
பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதன் பின்னர் கட்சிப் பணிகளில் தீவிரமாக சத்யா பன்னீர்செல்வம் ஈடுபட்டு வந்தார். அவருக்கு அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், ‘தமிழகத்தை மீட்போம் மக்களைக் காப்போம்’ என்ற பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 13-ம் தேதி பண்ருட்டிக்கு வந்தபோது, பெரும் கூட்டத்தைக் கூட்டி அவரது பாராட்டைப் பெற்றார்.
இச்சூழலில் நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான 15 போலீஸார் சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குச் சென்று, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சோதனை நடத்தினர். சோதனையின்போது திடீரென சத்யா பன்னீர்செல்வம் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.