வருமான வரி வழக்கில் ஜெயலலிதா, சசிகலா நேரில் ஆஜராக விலக்கு

Spread the love

ஜெயலலிதா, சசிகலா இருவரும் நேரில் ஆஜராவதிலிருந்து உயர் நீதிமன்றம் விலக்களித்துள்ளது.

பட மூலாதாரம், BBC World Service

படக்குறிப்பு, ஜெயலலிதா, சசிகலா இருவரும் நேரில் ஆஜராவதிலிருந்து உயர் நீதிமன்றம் விலக்களித்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலாவும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருந்தபோதும் இருவரும் வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்திருக்கும் சமரச மனு மீது வருமான வரித் துறை 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கில் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா ஆகிய இருவரும் அக்டோபர் 1ஆம் தேதி ஆஜராக வேண்டுமென சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் வருமான வரி பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்காக கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று சமரச மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த மனு பரிசீலனையில் இருக்கும்போது, நேரில் ஆஜராக உத்தரவிட்டது விதிமுறைகளுக்கு முரணானது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு செவ்வாய்க் கிழமையன்று உயர் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே. வாசுகி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் சமரச மனு மீது முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது என்றும் ஒரு பிரச்சனை தொடர்பாக, ஒரு புறம் துறை ரீதியான விசாரணை, மறுபுறம் நீதிமன்ற விசாரணை என இரண்டு நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும் வாதிட்டனர்.

வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. ராமசாமி, இந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பதால், இம்மாதிரி கோரிக்கைகளை மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில்தான் வைக்க வேண்டுமென வாதிட்டார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சமரச மனு மீது முடிவெடுக்கப்படும்வரை ஜெயலலிதாவும் சசிகலாவும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என நீதிபதி தீர்ப்பளித்தார். தவிர, விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடக்கலாம் எனவும் வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சமரச மனு மீது வருமான வரித் துறை 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996 ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.

அதற்குப் பிறகு 93-94 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல்செய்யவில்லை என சசிகலா மீதும் 1997ல் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. அதேபோல, 91-92, 92-93 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல்செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை.

இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த ஜனவரி 30 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. பிறகு இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த விவகாரத்தை சமரசமாகப் பேசித் தீர்ப்பதற்கு கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று வருமான வரித்துறையிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *