அரக்கோணம்: வரும் சட்டபேரவை தேர்தலில் துரோகிகளுக்கு அமமுக பாடம் புகட்டுவார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சிக்கு அவர் உருவாக்கிய விதிகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நீக்கி விட்டார். புதிய விதிகளை உருவாக்கி தன்னை பொதுச் செயலாளராக அறிவித்துக் கொண்டார். ஆனால், எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் உள்ளனர்.
பழனிசாமி கட்சியிலிருந்து களையை நீக்கி விட்டதாக தெரிவிக்கிறார். உண்மையில் அவர் துரோகத்தின் நஞ்சு செடியாக இருந்து கட்சியை அழித்து வருகிறார். தற்போது உள்ளது அதிமுக இல்லை. பழனிசாமி உருவாக்கிய கட்சியாகும். வரும் தேர்தலில் அமமுக கூட்டணி துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமில்லாமல், வரும் தேர்தலில் வெற்றி கூட்டணியாகவும் அமையும்.
மேலும், கடந்த அரசு வாங்கிய கடனை, தற்போதுள்ள அரசு கட்டுவது போல, இப்போது உள்ள ஆட்சியாளர்கள் வாங்கிய கடனை அடுத்து வருபவர்கள் கட்டுவார்கள். இந்தியா வளர்ந்து வரும் நாடு. அதில் தமிழ்நாடு வளர்ச்சி நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில், இன்னமும் இங்கு பலதரப்பு மக்கள் வாழ்வாதாரம் முன்னேறாமல் உள்ளது. அவர்களுக்கான திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தலாம். ஆனால், இலவச திட்டங்கள் அதிகமாக உள்ளது. இதனை அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும்.
பொதுமக்களும் தேவையற்ற திட்டங்களை அரசு அறிவித்தால் அதனை புறந்தள்ள வேண்டும். அந்த வகையில் திமுக அரசு அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் முதல்வர் கனவு பலிக்காது. மேலும், கரூரில் நடந்த துயர சம்பவம் ஒரு விபத்து. சதிவேலை அல்ல. அதில், விஜய் மீதும், காவல்துறை என்று யார் மீதும் குற்றம் சொல்ல இயலாது. சில கட்சியினர் இதனை அரசியல் ஆக்குகிறார்கள். அதே நேரத்தில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து உண்மையை சொல்ல வெண்டும்” என்றார். இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.