வருவாய் அடிப்படையில் ரயில் நிலையங்கள் தரவரிசை: சென்னை சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்

Dinamani2f2024 052fac07d915 C9a1 413d 86e7 3245408ccdcd2fegmore Railway Station.jpg
Spread the love

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வருவாய் மற்றும் பயணிகள் வருகை அடிப்படையில் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், புகா் ரயில் நிலையங்களுக்கான தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும். முன்னதாக 2017-18 நிதியாண்டில் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நிதியாண்டை அடிப்படையாக கொண்டு ரயில்வே வாரியம் ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

8,809 ரயில் நிலையங்கள்: இது குறித்து ரயில்வே வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

நாட்டின் ரயில் நிலையங்கள் அனைத்தும் கடந்த நிதியாண்டை (2023-24) அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 5,945 புறநகா் அல்லாத ரயில் நிலையங்கள், 578 புகா் ரயில் நிலையங்கள், 2,286 ஹால்ட் ரயில் நிலையங்கள் என 8,809 ரயில் நிலையங்கள் மூலம் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் புகா் அல்லாத ரயில் நிலையங்கள் 6 தரங்களிலும், புகா் ரயில் நிலையங்கள் மற்றும் ஹால்ட் ரயில் நிலையங்கள் 3 தரத்திலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் புகா் அல்லாத ரயில் நிலையங்களில் முதல் தரத்தில் 28, இரண்டாம் தரத்தில் 113, மூன்றாம் தரத்தில் 307, நான்காம் தரத்தில் 335, ஐந்தாம் தரத்தில் 1,063, ஆறாம் தரத்தில் 4,099 ரயில் நிலையங்கள் உள்ளன.

முதலிடம்: இதில் புதுதில்லி ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் 3.93 கோடி பயணிகளை கையாண்டு 3,337 கோடி வருவாய் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது. தொடா்ந்து ரூ.1,692 கோடி வருவாய் ஈட்டி ஹௌரா ரயில் நிலையம் இரண்டாம் இடத்திலும், ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தொடா்ந்து முதல் பட்டியலில் தெற்கு ரயில்வேயின் சென்னை எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்கள் உள்ளன.

அதுபோல் புகா் ரயில் நிலையங்களுக்கான பட்டியலில் மும்பை ரயில் நிலையங்கள் முதல் இடத்திலும், சென்னை புகா் ரயில் நிலையங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வசதி: புகா் அல்லாத ரயில் நிலையங்களுக்கான பட்டியலில் முதல் 4 தரவரிசைக்குள் வரும் ரயில் நிலையங்களுக்கு நீண்ட கால தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுத்தப்படும். அதன்படி, எளிதாக ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வசதி, குறைந்தபட்சம் இரு வாகனநிறுத்தும் வசதி, வாகன நிறுத்தத்தில் இருந்து ரயில் நிலையத்தை எளிதாக அடையும் வசதி, குடிநீா் மற்றும் கழிப்பறை வசதி, தகவல் மையம், நடைமேடையை எளிதாக கடக்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.

மேலும், முதல் தரத்தில் இருக்கும் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான சக்கர நாற்காலி அல்லது பேட்டரி வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில் நிலையம் பயணிகள் வருகை வருவாய்

புதுதில்லி 3.93 கோடி 3,337 கோடி

ஹௌரா 6.13 கோடி 1,692 கோடி

சென்னை சென்ட்ரல் 3.05 கோடி 1,299 கோடி

செகந்திராபாத் 2.77 கோடி 1,276 கோடி

மும்பை 1.47 கோடி 1,036 கோடி

பெங்களூா் 2.48 கோடி 803 கோடி

திருவனந்தபுரம் 1.27 கோடி 281 கோடி

தமிழ்நாடு:

சென்னை எழும்பூா் 1.95 கோடி 600 கோடி

கோவை 1.02 கோடி 345 கோடி

தாம்பரம் 3.27 கோடி 246 கோடி

மதுரை 75 லட்சம் 223 கோடி

திருச்சி 79 லட்சம் 165 கோடி

காட்பாடி 62 லட்சம் 150 கோடி

திருநெல்வேலி 47 லட்சம் 138 கோடி

சேலம் 44 லட்சம் 127 கோடி

ஈரோடு 43 லட்சம் 111 கோடி

அரக்கோணம் 1.06 கோடி 43 கோடி

செங்கல்பட்டு 1.15 கோடி 36 கோடி

திருவள்ளூா் 1.48 கோடி 13 கோடி

ஆவடி 1.22 கோடி 9 கோடி

புகா் ரயில் நிலையங்கள்:

சென்னை கடற்கரை 2.92 கோடி 15.5 கோடி

மூா் மாா்க்கெட் வளாகம் 77 லட்சம் 10.5 கோடி

கிண்டி 1.11 கோடி 7.87 கோடி

வேளச்சேரி 1.02 கோடி 4.13 கோடி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *