வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா!

Dinamani2f2025 03 232fngvvqv7i2fvalangai.jpg
Spread the love

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அம்மனை சீதளாதேவி எனவும் அழைப்பர். வருடம் தோறும் இக்கோயிலில் பங்குனித் திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டும் இக்கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழாவும், 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காப்பு கட்டுதல், 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காப்பு கட்டுதல் மற்றும் திருவிழா தொடக்க விழாவும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.

b4b87676 8121 45c9 80b4 7116da49d45c

இந்நிலையில் இன்று(மார்ச் 23) ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெற்றது.

கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து விடுபட இக்கோயில் அம்மனிடம் பாடைக்காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்துவதாக வேண்டுதல் செய்து கொள்வது வழக்கம். நோயிலிருந்து விடுபட்டவுடன் பங்குனித் திருவிழாவின் 8 ஆம் திருநாளான பாடைக்காவடி திருவிழாவில் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இன்று இக்கோயிலில் நடைபெற்ற பாடைக்காவடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திகடனைச் செலுத்தினர்.

ஆற்றங்கரைகளில் பாடைகள் கட்டப்பட்டு நோயிலிருந்து மீண்டு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களை புனித நீராட செய்து நெற்றியில் திருநீறு பூசி பாடையில் படுக்கவைத்து கிராமிய வாத்தியங்கள் முழங்க நான்கு பேர் பாடையை சுமந்து வர ஒருவர் தீச்சட்டி ஏந்திவர வலங்கைமான் நகர முக்கிய வீதிகள் வழியாக பாடைக்காவடி மகாமாரியம்மன் கோயிலை மூன்று முறை சுற்றி வலம் வந்து கோயில் கொடிமரத்தின் முன்பு பாடைக்காவடி இறக்கி வைக்கப்பட்டது.

கோயில் பூசாரி படைக்காவடியில் சுமந்து வரபப்ட்ட நேர்த்திகடன் செலுத்துபவரின் நெற்றியில் திருநீறு பூசி எழச்செய்தார். நேர்த்திக்கடன் செலுத்தியவர் அம்மனை தரிசித்து சென்றனர். அவரவர் குல வழக்கப்படி படைக்காவடி எடுத்தனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்… நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!

செடில் காவடி, பறவைக் காவடி, பால்குடங்கள் எடுத்தும், மாவிளக்கிட்டும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தியதை காணமுடிந்தது. மாலையில் செடில் சுற்றுதல், அம்மன் வெள்ளிவாகன புறப்பாடும் நடைபெற்றது.

பாடைக்காவடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் உத்தரவின் பேரில் அரசின் பல்வேறு துறைகளும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உத்தரவின் பேரில் வலங்கைமான் போலீஸார் செய்திருந்தனர்.

வலங்கைமானில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை மாலை முதல் வலங்கைமானுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. வலங்கைமான் விழாகோலம் பூண்டு காட்சியளித்தது.

திங்கள்கிழமை வலங்கைமானில் மீன் திருவிழா நடைபெறுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *