அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் அதீத வலி, விபத்துகள், சிறுநீரகக் கல் வலி, முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் கடுமையான தலைவலி, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம், அதிகப்படியான பயம் மற்றும் தூக்கமின்மை, ரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்றவற்றால் இப்படி ஏற்படலாம்.
அதிக வலி ஏற்படும்போது மூளையிலிருந்து வரும் வேகஸ் நரம்பு (Vagus Nerve) தூண்டப்படுகிறது. இதனால் இதயத்துடிப்பு மெதுவாகி, ரத்த அழுத்தம் குறைகிறது. இதன் விளைவாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் ஆக்ஸிஜனும் சில நொடிகள் குறைவதால், தற்காலிக மயக்கம், பேச முடியாமை, உடல் தளர்ச்சி மற்றும் வியர்வை போன்றவை ஏற்படுகின்றன.

இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால், படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்கக்கூடாது. முதலில் பக்கவாட்டில் திரும்பி, கையை ஊன்றி எழுந்து உட்கார வேண்டும். சில நிமிடங்கள் கழித்து கால்களைக் கீழே தொங்கவிட்டு அமர்ந்து, அதன் பின்பே நிதானமாக எழுந்து நடக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த பாதுகாப்பான வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்தி வலியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
உடலில் நீரிழப்பு ஏற்படாதபடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். போதிய ஓய்வும், மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளும் அவசியம்.
இது தற்காலிகமான பாதிப்பு என்பதால் பயப்படத் தேவையில்லை. இருப்பினும், இது போன்ற அறிகுறிகள் முதன்முறை ஏற்படும்போது நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மருத்துவர் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால், மூளைக்கான ஸ்கேன் (Brain Scan) செய்ய அறிவுறுத்துவார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.