சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்றும் இது வரும் அக்.17ஆம் தேதி அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 490 கி.மீ தொலைவில் இது நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வரும் அக்.17ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கரையை கடக்கும்.
கரையைக் கடக்கும்போது தரைக் காற்றின் வேகம் சுமார் 35 முதல் 55 கி.மீ வேகத்தில் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக் கூடும். வட தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்” இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் மழை: சென்னையில் நேற்றிரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் காலையில் மீண்டும் மழை தொடங்கியது. அடையாறு, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னையில் நேற்று இரவு பெய்த மழையில் 8 மரங்கள் சாய்ந்தன, அவை அனைத்தும் உடனே அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன.
சுரங்கப்பாதைகள் மூடல்: சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழைநீர் தேக்கம் காரணமாக, பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.