‘வளர்ச்சியடைந்த’ தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள்: முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு | What are the challenges faced by states before the 16th Finance Commission? – CM Stalin

1342377.jpg
Spread the love

சென்னை: “தமிழகம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் போன்ற தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன” என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், “16-வது நிதிக்குழு எடுக்க உள்ள முடிவுகள், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிதிச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுப்பது மட்டுமின்றி, எதிர்வரும் காலங்களில் இந்தியா தேர்வு செய்யப்போகும் பொருளாதாரப் பாதையின் மீதும் தாக்கம் செலுத்தக் கூடியவையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில், பொருளாதார வல்லுநர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்குழுவின் கூட்டம் தமிழகத்தில் நடைபெற்றது. பல்வேறு துறைசார் நிபுணர்களைக் கொண்ட இந்த குழு இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதாரச் சிக்கல்கள், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளில் உள்ள சமச்சீரற்ற தன்மை ஆகியவற்றைச் சரிசெய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்குழு எடுக்க உள்ள முடிவுகள், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிதிச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுப்பது மட்டுமின்றி, எதிர்வரும் காலங்களில் இந்தியா தேர்வு செய்யப்போகும் பொருளாதாரப் பாதையின் மீதும் தாக்கம் செலுத்தக் கூடியவையாகும்.

உலக அளவில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இவ்வேளையில், 16-வது நிதிக்குழு தனது பணியை மேற்கொண்டுள்ளது. தற்போது வளர்ந்து வரும் புதிய முறைகளான, நட்புறவு நாடுகளுக்கு வணிகச் செயல்பாடுகளை மாற்றுதல் மற்றும் உற்பத்தி மற்றும் முதலீடுகளை மீண்டும் சொந்த நாட்டில் தொடங்குதல் உள்ளிட்டவை சர்வதேச வணிகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளை மறுகட்டமைப்பு செய்கின்றன. இந்த மாற்றங்கள் இந்தியா மற்றும் தமிழகத்துக்குத் தனித்துவமான வாய்ப்புகளையும் வழங்குகின்றன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், மாநிலங்களுக்குச் சமமான மறுபங்கீடு மற்றும் தமிழகம் போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் வளர்ச்சியை ஊக்குவித்தல் உள்ளிட்ட சவால்கள் இந்த நிதிக்குழுவின் முன்னுள்ளது.

1951-ம் ஆண்டு, முதல்நிதிக்குழு அமைக்கப்பட்டதிலிருந்து, தொடர்ந்து வந்த ஒவ்வொரு நிதிக்குழுவும், அந்தந்தக் காலத்தின் நிதிச் சிக்கல்களுக்கு ஏற்ப தங்களது அணுகுமுறையை மாற்றியமைத்துக் கொண்டன. ஒவ்வொரு நிதிக்குழுவும் செங்குத்துப் பகிர்வின் வழியாக மாநிலங்களுக்கான பகிர்வை அதிகரிப்பதன் மூலம் சமமான வளப்பங்கீட்டை அடையவும், கிடைமட்ட பகிர்வின் வழியாகக் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவும் முயற்சி செய்துள்ளன.

ஆனால், அவர்களின் நோக்கங்களுக்கும், அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. எனவேதான், நிதிப்பகிர்வு முறையில் புதிய மற்றும் நியாயமான அணுகுமுறையை நாங்கள் முன்வைக்கிறோம். உதாரணமாக, 15-வது நிதிக்குழு மாநிலங்களுக்கு 41% வரிப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையிலும், முதல் நான்காண்டுகளுக்கு மத்திய அரசின் வரிவருவாயில் இருந்து 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டது. எதிர்பாராத விதமாக வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை ஒன்றிய அரசு உயர்த்தியதே பகிர்வில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகும்.

மாநிலங்களுக்கான பகிர்வை 50 சதவீதமாக உயர்த்துதல்: மாநிலங்கள் மக்களுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் அதேவேளையில், அவற்றுக்கான மத்திய நிதியும் அதற்கேற்றவாறு உயர்த்தப்பட வேண்டும். மத்திய திட்டங்களுக்குச் செலவாகும் கூடுதல் நிதி மற்றும் மத்திய அரசின் குறைந்த நிதிப்பகிர்வு ஆகிய இரண்டு காரணங்களும் மாநிலங்கள் மீதான நிதிச்சுமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. எனவேதான், மத்திய வரிவருவாயில் இருந்து மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். இது மாநிலங்கள் நிதி சுயாட்சியுடன் செயல்படவும், மாநில மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிமுகப்படுத்தவும் உதவும்.

கடந்த 45 ஆண்டுகளாக, கிடைமட்ட வரிப்பகிர்வு முறையின் மூலமாகப் பின்பற்றுபட்டுவந்த மறுபங்கீட்டு கொள்கையானது, வளர்ச்சிக்குப் பெரியளவில் உதவவில்லை என்பது தெளிவாகிறது. எனவே இங்கு எழும் அடிப்படைக் கேள்வி என்னவென்றால், குறைந்த அளவிலான தேசிய பொருளாதார வளங்களுடன், வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களுக்குப் பெரிய பங்கை வழங்குவதில், கவனம் செலுத்தப் போகிறோமா? அல்லது பெரிய அளவிலான தேசிய பொருளாதார வளங்களுடன், அனைவருக்கும் அதிகமான வளங்களைப் பகிர்ந்தளிக்கும் சமமான பங்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்தப் போகிறோமா? இதற்கான விடை சிக்கலானது.

இருப்பினும் இதில் சமச்சீரான அணுகுமுறையே பெரிய அளவிலான தேசிய பொருளாதார வளங்களுடன், வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களுக்குத் தேவையான பகிர்வை அளிக்கவும், முன்னேற்றப் பாதையில் இருக்கும் மாநிலங்களின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கத் தேவையான வளங்களைப் பகிர்ந்தளிக்கவும் உதவும். தங்களது முழுத்திறனையும் பயன்படுத்தி, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் உந்துசக்தியாக இருக்க, வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு இதுபோன்ற வரிப்பகிர்வு முறையே அவசியம்.

வளர்ச்சியடைந்த மாநிலங்களின் தனித்துவமான சவால்கள்: இதற்கிடையில், தமிழகம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் போன்ற தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தேசிய சராசரியை விட வயதானோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வயதான மக்களுக்கான ஆதரவு திட்டங்களுக்கு ஆகும் செலவினங்கள் அதிகரிக்கும் நிலையில், நுகர்வு அடிப்படையிலான வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுபோன்ற மாநிலங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும், ‘நடுத்தர வருமான மாநிலம்’ எனும் பொறிக்குள் சிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

அதேபோல், வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் நகரமயமாதல் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால்களில் ஒன்றாகும். தமிழகம் போன்ற மாநிலங்கள் நாட்டிலேயே வேகமாக நகரமயமாதல் அதிகரிக்கும் சவாலை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக 2031-ம் ஆண்டு அதன் நகர்ப்புற மக்கள்தொகை 57.30 சதவீதம் என்ற நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அப்போதைய தேசிய சராசரியான 37.90 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் எதிர்கால நகரமயமாதலுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவைப்படும் வளங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அதேசமயம் நிதிக்குழுவின் பரிந்துரைகள் பொருளாதாரக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களும் சமமாகப் பங்களித்து, அதிலிருந்து பலனடைவதற்கும் உகந்த எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும் கூட. அது உற்பத்தியை ஊக்குவிப்பது, நகரமயமாதல் சவால்களை எதிர்கொள்வது அல்லது காலநிலை மாற்றத்தைக் கையாள்வது என எதுவாக இருப்பினும், நிதிக்குழுவின் பரிந்துரை கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியாவை நிலைநிறுத்தத் தேவையான பாதையையும் தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது,” என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *