வேலூர்: வேலூரில் பள்ளியில் மாணவிகள் சேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியைப் போன்று ரீல்ஸ் வெளியிட்ட விவகாரத்தில், வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் மாணவிகள் சிலர் இரண்டு மாதங்களுக்கு முன்பு சக மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்துவது போன்று பள்ளியிலேயே நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி விசாரணைக்கு உத்தரவிட்டதுடன் அந்த பள்ளியில் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அந்த பள்ளியின் வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா மற்றும் பணியில் இருந்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் வெளியிட்டதை தொடர்ந்து மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவின் போது ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு உண்ண வேண்டும் என்றும் பள்ளிக்கு வரும் மாணவர்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வகுப்பு ஆசிரியர்கள், பாட பிரிவு ஆசிரியர்கள் பாடம் வாரியாக மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவேட்டை கண்காணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தனர்.