சென்னை: வடலூரில் உள்ள பெருவெளி நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்கப்படாத நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைவதை எப்படி எதிர்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தமிழக அரசு சார்பில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ். சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “வடலூரில் தமிழக அரசு தரப்பில் ரூ.99 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச வள்ளலார் மையத்துக்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, நகரமைப்பு திட்ட அனுமதி என அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. அங்கு சர்வதேச மையம் அமைக்கப்பட்டு மீண்டும் சத்திய ஞான சபை வசமே ஒப்படைக்கப்படும். காலி நிலத்தில் கட்டுமானப்பணிகளை தொடங்க அடிக்கல் நாட்ட முற்பட்டபோது அந்த இடம் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்பட்டது,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஜோதி தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் அங்கு கட்டுமானங்களை மேற்கொள்வதால் பக்தர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும்,” என மனுதாரர்களுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர்கள் தரப்பில், “வள்ளலார் தனது திருவருட்பா பாடல்களில் ஜோதி தரிசனத்துக்காக பெருவெளியை அப்படியே காலியாக வைத்திருக்க வேண்டும், எனக்கூறியுள்ளார். வேறு இடத்தில் சர்வதேச மையம் அமைக்கலாம். 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அந்த வழிபாட்டு தலத்தை பாதுகாக்க வேண்டும்,” என வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அந்த பெருவெளி இடம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்கப்படாத நிலையில் சர்வதேச மையம் அமைவதை எப்படி எதிர்க்க முடியும்?என்றனர். அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அந்த வழிபாட்டுத் தலம் புராதன சின்னம் தான். அதை அரசு தொடப்போவதில்லை. ஆனால் அந்த நிலம் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது,” என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் ஆக.22-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.