வழக்கமான இனிப்பு சேர்த்த கார்போனேட்டடு பானங்களை விடவும் டயட் சோடா மற்றும் டயட்பானங்கள் ஆபத்தானவை. இவை இனிப்பு உணவுகளின் மீதான தேடலை அதிகரித்து அதன் தொடர்ச்சியாக உடல் பருமன், டைப்-2 டயாபட்டீஸ் போன்றவற்றுக்கும் காரணமாகலாம்.
டயட் சோடாவில் மிக அதிக அளவு செயற்கை இனிப்பு சேர்க்கப்படும். இந்த அளவவானது நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் இனிப்பின் அளவைவிட பல மடங்கு அதிகம். இந்தச் செயற்கை இனிப்பு உங்கள் உடலை ஏமாற்றி அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இன்சுலின் சுரப்பு அதிகரித்தால் வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்பு அதிகமாவதுடன் உடல் எடையும் கூடும்.
இந்த வகை பானங்கள் உங்கள் உடலைக் குழப்புவதால் உடலின் வளர்சிதைமாற்ற அளவும் குறையும், எனவே உங்கள் உடல் தினமும் எரிக்கும் ஆற்றலின் அளவும் குறையும்.
அடிக்கடி டயட் சோடா உள்ளிட்ட டயட் பானங்களை அருந்துபவர்களுக்கு வழக்கத்தைவிட சீக்கிரமே பசியெடுக்கும். உணவின் மீதான தேடல் அதிகரிக்கும் குறிப்பாக அரிசி, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும்.
அடிக்கடி டயட் சோடா குடிப்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பும் பற்சிதைவும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, நீங்கள் அருந்தும் இனிப்பு சேர்த்த பானங்களுக்கு மாற்றாக டயட் சோடாவை நினைக்க வேண்டாம். அதற்கு பதில் பிளாக் டீ, ஹெர்பல் டீ, சர்க்கரை சேர்க்காத ஃப்ரெஷ் ஜூஸ், இளநீர் மற்றும் மோர் போன்றவற்றை அருந்தலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.