மதுரை: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து முடிவு செய்ய தலைமை அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுசிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. 2010-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 13 வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர்களை பாதுகாக்க தனி சட்டம் அமலில் இல்லை. கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் உள்ளது. தமிழகத்திலும் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை தடுக்க வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், “மத்திய, மாநில அரசுகளுக்கே சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்ற அனைத்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும்.
அவர்கள் நவ. 18 முதல் 20-ம் தேதி வரை விவாதித்து, வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்துக்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அந்த நெறிமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.