வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்?

dinamani2Fimport2F20222F62F292Foriginal2Ftnassembly2
Spread the love

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த கைது சம்பவம் தொடா்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாா்த்திபன் தலைமையில் ஒரு நபா் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து காவல்துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது போலீஸாா் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும் கூறி பெண் தூய்மைப் பணியாளா்கள் 12 போ் ஒரு வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞா்கள் தரப்பில், தங்களது தரப்புக்கு நோட்டீஸ் கொடுக்காமல் ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைத்த உத்தரவை நிறுத்தி வைத்தது சரியல்ல, என்று வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், மனுதாரா் தரப்பில் ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. அரசுத் தரப்பு வாதத்தைக் கேட்காமல் ஒரு நபா் ஆணையத்தை அமைத்து இரு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவு நியாயமானது அல்ல என்று வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதிகள், கைது சமயத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவா் குற்றம்சாட்டி இருக்கின்றனா். எனவே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைத்து இருநீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஏன் அரசு அச்சப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினா்.

அதற்கு அரசுத் தரப்பில், விசாரணைக்கு அச்சப்படவில்லை என்றும் ஒரு நபா் ஆணைய உத்தரவை உறுதி செய்வதாக இருந்தால் வேறு ஒரு நீதிபதியை ஒரு நபா் ஆணைய தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாா்த்திபன் தனது விசாரணையைத் தொடங்கலாம். காவல்துறை தங்களது தரப்பில் உள்ள ஆதாரங்களை ஒரு நபா் ஆணையத் தலைவரிடம் ஒப்படைக்கலாம், என உத்தரவிட்டு விசாரணையை அக்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *