வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தவறான தகவல்களும் நம்பிக்கைகளுமே ஃபாஸ்டேக் ஒட்டவிடாமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக முன்பக்கக் கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டியிருக்க வேண்டும். அப்படி ஒட்டாவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, இந்த இரு மடங்குக் கட்டணம் தொடா்பான அறிவிப்பை சுங்கச் சாவடியின் முன்பகுதியிலேயே பெரிய அளவில் எழுதி வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரணம், வாகன ஓட்டிகள் சிலர் காருக்குள் ‘ஃபாஸ்டேக்’ ஸ்டிக்கரை வைத்துக் கொண்டு சுங்கச் சாவடியைக் கடக்கும்போது மட்டும் அதைக் கையில் எடுத்து முன்பக்கக் கண்ணாடியில் காட்டுகின்றனா். இதனால், தேவையற்ற தாமதம் ஏற்படுவததாகவும் இதனைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இயக்கப்படும் அனைத்து நான்குச் சக்கர வாகனங்களுக்கும் ‘ஃபாஸ்டேக்’ ஸ்டிக்கரை முன்பக்க கண்ணாடியில் உள்பக்கமாக ஒட்ட வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நடைமுறையால், சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் காத்திருக்கும் சிக்கல் தீர்வு காணப்பட்டது என்றே கூறப்படுகிறது.
இவ்வளவுக்குப் பிறகும், கார்களில் தங்களது ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஒடுவதில் என்னதான் பிரச்னை என்றால், அது குறித்து வெளியான தவறான தகவல்களும், அதனால் ஏற்பட்ட தவறான நம்பிக்கைகளுமே காரணம் என்று கூறப்படுகிறது.
மோசடி அபாயம்?
காரில் ஒட்டப்பட்டிருக்கும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று சிலர் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியிருந்தனர். தன்னுடைய நண்பருக்கு இப்படி நேரிட்டதாகக் கூறி ஒருவர் போட்ட விடியோ வைரலாகி, பலரும் அதனை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இது குறித்து அதிகாரிகள் கூறுவது என்னவென்றால், ஃபாஸ்டேக் மூலம், ஒரு நபரின் வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு நபரின் வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்ற முடியாது என்றும், ஃபாஸ்டேக் அட்டையிலிருந்து அனுமதிபெற்ற வணிகர்களுக்கே பணத்தை மாற்ற முடியும் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.
ஸ்மார்ட்வாட்ச் மூலம் மோசடியா?
இந்த ஃபாஸ்டேக் வந்த போது, காரில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த அட்டையில், ஸ்மார்ட்வாட்ச் வைத்தே பண மோசடி செய்ய முடியும் என்பது போல சில விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அதையும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். அதிகாரப்பூர்வ வணிகர்கள் மட்டுமே ஃபாஸ்டேக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும் என்று உறுதி அளித்துள்ளனர்.
அரசுப் பணியாளர்கள்
அரசுப் பணியாளர்கள் தங்களது கார்களில் ஃபாஸ்டேக் ஒட்டுவதில்லை, காரணம், சுங்கச் சாவடிகளைக் கடக்கும்போது, தங்களது அரசுப் பணி அடையாள அட்டையைக் காண்பித்து சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு பெற்றுக் கொள்வதாகவும், ஒருவேளை ஃபாஸ்டேக் ஒட்டிவிட்டால், தான் சுங்கச் சாவடி ஊழியர்களிடம் கூறும் முன்பே, தானாக தனது கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்றும் கூறுகிறார்கள். இதுபோல விலக்குப் பெறும் வழியிருப்பவர்களும் ஃபாஸ்டேக் ஒட்ட மறுக்கிறார்கள்.
பல கார்கள் இருந்தால்?
ஒரு வீட்டில் பல கார்கள் இருந்து, ஒரே ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்கள், ஃபாஸ்டேக்-ஐ கார்களில் ஒட்டாமல் எந்தக் காரை எடுத்துச் சென்றாலும், ஒரே ஃபாஸ்டேக் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், மத்திய அரசோ, ஒரு காருக்கு ஒரு ஃபாஸ்டேக் தான் என்று விதிமுறை வகுத்துள்ளது.
கார் தொலைந்துவிட்டால்?
ஒருவேளை தனது கார் தொலைந்துவிட்டால், ஃபாஸ்டேக் மூலம் ஒட்டுமொத்தமாக வங்கிக் கணக்கில் இருக்கும் பணமும் பறிபோய் விடுமோ என நினைக்கிறார்கள் சிலர். வாகனத்தோடு, வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தையும் அவர்களால் பயன்படுத்த முடியுமே என நினைத்தே இதுவரை ஃபாஸ்டேக் ஒட்டாமல் இருப்பதாகவும் சிலர் கூறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு காருக்கு ஒரு ஃபாஸ்டேக்தான் பயன்படுத்த வேண்டும். ஒரு காருக்கு பல ஃபாஸ்டேக் வாங்கினாலும், கடைசியாக வாங்கியதே செயல்பாட்டில் இருக்கும். ஒருவேளை கார் அல்லது ஃபாஸ்டேக் தொலைந்துவிட்டால், வங்கியை தொடர்புகொண்டு, அந்தக் கணக்கை முடக்குமாறு வலியுறுத்தலாம் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.