வாக்காளர்களுடன் ‘டச்சில்’ இருக்க வாட்ஸ் அப் குழுக்கள்! – அதிமுக ஐடி விங் ஏற்பாடு | WhatsApp groups to stay in touch with voters

Spread the love

தமிழகம் முழுவதும் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், தங்கள் பூத்தில் உள்ள அதிமுக மற்றும் நடுநிலை வாக்காளர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அதில் பிரச்சாரம் உள்ளிட்ட கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிர்ந்து வாக்காளர்களுடன் தொடர்பில் இருக்கும்படி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 68,019 ஆயிரம் பூத்களுக்கும் தலா 9 பேர் கொண்ட பூத் கமிட்டிகளை அதிமுக அமைத்திருக்கிறது. அதிமுக மேலிட பார்வையாளர்கள் தலைமையில் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வாட்ஸ் அப் குழுக்களையும் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், ‘‘சென்னையில் இருந்தபடியே பொதுச்செயலாளர் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் விதத்தில் 69,019 பூத்களின் பூத் கமிட்டி நிர்வாகிகள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஐடி விங் நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணித்து பொதுச்செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்கள். தாங்கள் அழைக்கும் நேரத்தில் தொடர்பு கொள்ள வசதியாக பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு மொபைல் போன்களையும் வழங்கி இருக்கிறது ஐடி விங்.

ஒரு பூத்துக்கு சராசரியாக 1,200 வாக்காளர் உள்ளனர். பூத் கமிட்டி நிர்வாகிகள் 9 பேரும், தங்களது பூத்களில் உள்ள வாக்காளர்களில் அதிமுக ஆதரவாளர்கள், அதிமுக-வினர், நடுநிலை வாக்காளர்களைக் கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைத்து பகுதிச் செயலாளர்களை அட்மினாகக் கொண்ட வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி வருகின்றனர்.

இந்த வாட்ஸ் அப் குழுக்களில் அதிமுக தலைமை அனுப்பும் தகவல்களையும், அந்தந்த வார்டு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளையும், திமுக ஆட்சியின் அவலங்களையும் பகிர வேண்டும் என்பது உத்தரவு. தேர்தல் முடியும் வரை இந்த குழுக்களை ஆக்டிவாக வைத்திருந்து, இதில் இணைந்திருக்கும் வாக்காளர்களுடன் பகுதிச் செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் தொடர்பில் இருக்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *