சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல் என மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் இன்று (வெள்ளிக் கிழமை) காலை சென்னை எழும்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பின்னர் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1: இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்ட தகவல்கள் வெளியாகி அங்கு எதிர்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் எஸ்ஐஆர் மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது என தமிழ்நாடு முதல்வர் கூறியுள்ளார். அவசரகதியில் செய்யப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கை என்பது மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
குடிரியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவரின் குடியுரிமையை தீர்மானிப்பதை எஸ்ஐஆர் பணியுடன் இணைத்துள்ளனர். அதைச் செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. 2003-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தைப் போல இதைப் பார்க்க முடியாது. இந்தத் திட்டம் மிக ஆபத்தானது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் விளைவு என்பது பிஹாரில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை முன்வைக்கப்பட்டாலும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து முறையான பதில் வரவில்லை.
தமிழ்நாட்டில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி, டிசம்பர் 9 வரையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளும் டிசம்பர், 9 அன்று புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களிடம் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அவை டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை பெறப்பட உள்ளது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை இந்தப் பணிகள் நடக்க உள்ளன. பிப்ரவரி 7 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மூன்று மாத காலத்தில் இந்த பணிகளை முடிப்பதற்கு கால அவகாசம் போதுமானது அல்ல.
பிஹாரில் வாக்காளர் திருத்தப் பட்டியலில் நடந்த முறைகேடுகளை தமிழ்நாட்டிலும் செயற்படுத்த முனைந்துள்ள ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துக் கட்சிகளும் முறியடிப்பது தலையாய கடமை என்பதை மதிமுக நிர்வாகக்குழு தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் 2: நெல்லையில் 03.11.2025 அன்று அறப்போர் இயக்கம் சார்பில், கல் குவாரிகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில், 25-க்கும் மேற்பட்டோரைக் கொண்ட கும்பல் புகுந்து, வன்முறையில் ஈடுபட்டு தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் உள்ளிட்ட பகுதி மக்கள் காயமடைந்துள்ளனர்.
இக்கூட்டத்தில் வழக்கறிஞர் ஏ.சுரேஷ் தலைமையிலான குழு, மக்கள் கருத்துகளைக் கேட்டறிந்தது. இந்தக் குழுவில் சுரேஷ் தவிர தன்னாட்சி அமைப்பு கிராம சபை வல்லுநர் நந்தகுமார், நீர் மேலாண்மை நிபுணர் உதயகுமார், சுற்றுச் சூழல் நிபுணர் தணிகைவேல், விவசாய மேலாண்மை நிபுணர் நந்தினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து தாங்கள் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்துத் தெரிவித்தனர்.
அதிகமான கல் குவாரிகள் இருக்கக்கூடிய ராதாபுரம் பகுதியிலிருந்து பெரும்பான்மையான மக்கள் வந்து தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்துத் தெரிவித்தனர். முக்கியமாக அதிகப்படியான வெடி வெடிப்பதால் வீடுகள் அதிர்வது, நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவது, குவாரி வேலைகளால் ராதாபுரம் வாய்க்காலில் தண்ணீர் வராதது மற்றும் விவசாய பாதிப்பு குறித்து மக்கள் பேசினர்.
மேலும் ஆலங்குளம், பொன்னாக்குடி, கயத்தாறு, தாதநூத்து, அடைமிதிப்பான்குளம், ரெட்டியார்பட்டி, தாழையூத்து, தச்சநல்லூர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திசையன்விளை, அம்பாசமுத்திரம் போன்ற பல இடங்களிலிருந்தும் குவாரிகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்கள் எடுத்துரைத்தனர். அப்போது உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய வன்முறைக் கும்பல் மற்றும் பின்னணியில் இருப்போரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல் குவாரிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். அதில் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். சட்ட விரோதமாக இயங்கும் கல் குவாரிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். முறைகேடாக இயங்கிய, இழப்புகள் ஏற்படுத்திய கல் குவாரி நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு, சட்டவிரோதமாக குவாரியை இயக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3: கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி ஒன்றிய தொழிலாளர் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை வரைவு பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்காக வெளியிடப்பட்டது. ஆனால், இந்த வரைவு அறிக்கை சமூக, பொருளாதார, பாலின சமத்துவமின்மையை வலியுறுத்தும் மனுஸ்மிருதி அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த வரைவுக் கொள்கையில், உழைப்பு என்பதை ‘ராஜதர்மம்’ என வரையறுத்துள்ளது. இதில் “சமூக ஒற்றுமை, பொருளாதார ரீதியான வளமான வாழ்வு, மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைத்து நீடிக்கச் செய்வதில் உழைப்பு செலுத்துவது என்பது புனிதமான மற்றும் தார்மீக கடமையாகும்.
“இந்திய உலகக் கண்ணோட்டத்தின் படி, வேலை என்பது வெறும் வாழ்வாதாரத்திற்கானது மட்டுமல்ல. அது பரந்த தர்மத்திற்கு (பிறப்பின் அடிப்படையிலான கடமை) செய்யும் பங்களிப்புமாகும். இந்தக் கண்ணோட்டம் என்பது, அனைத்துத் தொழிலாளர்களையும் (கைவினைஞர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் அல்லது தொழிலாளர்கள்) சமூக உருவாக்கத்தில் ஒரு அத்தியாவசிய பங்கேற்பாளராக அங்கீகரிக்கிறது.
“மனு ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, சுக்ரநீதி மற்றும் அர்த்தசாஸ்திரம் போன்ற பண்டைய நூல்கள் ராஜதர்மம் என்ற நெறிமுறைகளை வெளிப்படுத்துகின்றன. நீதி, நியாயமான ஊதியம் மற்றும் தொழிலாளர்களைச் சுரண்டலிலிருந்து பாதுகாப்பது ஆட்சியாளரின் கடமை என வலியுறுத்துகிறது.” என இந்த வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால், பண்டைய காலங்களில் தொழிலாளர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை; கூலி முறையும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பண்டைய இந்து நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கொள்கைக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உழைப்பை தர்மம் அல்லது ராஜதர்மத்துடன் ஒப்பிடுவது என்பது ஒரு மோசமான யோசனையாகும். ஏனெனில், அது தொழிலாளர்களின் உரிமைகள், நியாயமான ஊதியம் மற்றும் பாதுகாப்பைப் புறக்கணிக்கிறது.
இந்துத்துவக் கருத்தியலின் இன்னொரு பரிணாமாக வெளியிடப்பட்டுள்ள தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை வரைவைக் கைவிடுவதுடன், தொழிற்சங்க அமைப்புகளின் கருத்துகளை அறிய வேண்டும் என்று மதிமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4: தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் கொண்டு வருவது வாக்காளர்களை நீக்கும் தந்திரம். பிஹாரில் நடந்த இப்பணிக்கு எதிரான வழக்கில் இறுதி உத்தரவு இன்னும் பிறப்பிக்கவில்லை.
இச்சூழலில் தமிழகத்தில் இதனை செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. தமிழகத்தில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் இப்பணியை ஏற்க முடியாது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் காலகட்டத்தில் பண்டிகைகள் வருவதால் வாக்காளர் பட்டியலில் சேர விரும்பும் வாக்காளர்களின் பெயர் விடுபட நேரிடும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல் என்பதால் இதனைக் கண்டித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில், நவம்பர் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கழக நிர்வாகக் குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 5: அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அரசின் சார்பில் விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க வைப்புத் தொகை ஒரு லட்சம் முதல் இருபது லட்சம் வரை செலுத்த வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் குறிப்பிட்டதைவிட பொதுக்கூட்டத்தில் 50 சதவிகிதம் பேர் பங்கேற்றால் வைப்புத் தொகை திருப்பித் தரப்படாது என்றும் கூறப்பட்டிருப்பது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
மேலும் சாலைப் பேரணி நடத்துவதற்கும் தேசிய நெஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை அல்லது ஊராட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயம் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய நிர்வாக முறையில் இது கூடுதல் கால விரயத்தை எற்படுத்துவதாகவும், அரசியல் கட்சிகளின் அடிப்படை ஜனநாயக உரிமையை பறிப்பதாகவும் அமைந்துவிடும். மேலும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை அதிகார வர்க்கம் கட்டுப்படுத்தும் நிலைமையையும் ஏற்படுத்தும்.
எனவே, அரசியல் கட்சிகளின் சாலைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். இதுகுறித்து அரசியல் அமைப்புகள் மற்றும் பொதுநல இயக்கங்களின் கருத்துக்களையும் கேட்டு தீர்மானிக்க வேண்டும் என்று கழக நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.