“வாக்குரிமைப் பறிப்பு சதிக்கு எஸ்ஐஆர், ஹரியானா ஃபைல்ஸ் சான்று” – முதல்வர் ஸ்டாலின் | CM Stalin Support Rahul Gandhi’s Opinion about Vote Theft Issue

Spread the love

சென்னை: “எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்களின் வாக்கு உரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பிஹாரும், இன்று வெளியாகியுள்ள ஹரியானா ஃபைல்ஸுமே சான்று” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்மைக் காலமாக பாஜக பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத் தன்மை குறித்து மீண்டும் ஒருமுறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ‘பச்சையான ஆதாரங்கள்’ அதிர்ச்சியூட்டுகின்றன.

வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜகவின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. இதன் அடுத்த கட்டம்தான் எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்களின் வாக்கு உரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பிஹாரும், இன்று வெளியாகியுள்ள ஹரியானா ஃபைல்ஸுமே சான்று!

இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா?” என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை என்றும், ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *