`திமுக அரசு வாங்கிய கடனில், ரூ.2.2 லட்சம் கோடி யாருக்கும் பயனில்லாமல் மாயமானது எங்கே?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025&ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. அதே நேரத்தில் மூலதனச் செலவாக ரூ. 1 லட்சத்து 66,754 கோடியை மட்டுமே செய்திருக்கிறது. இதன் மூலம் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக திமுக அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்தது திமுக அரசு தான். இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தப்பட்ட 1952&ஆம் ஆண்டிலிருந்து திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முந்தைய 2020&21ஆம் நிதியாண்டின் இறுதி வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால், அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் மட்டும் ரூ.4.73 லட்சம் கோடி ஆகும். இதற்கு காரணம் திமுக அரசின் திறனற்ற நிதி நிர்வாகம் தான். இதை கடந்த காலங்களில் பலமுறை புள்ளி விவரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தி வந்திருக்கிறது.
ஆனால், திமுக அரசு வீணாக கடன் வாங்கவில்லை என்றும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன்களை வாங்கியதாகவும் விளக்கமளித்த ஆட்சியாளர்கள், வாங்கிய கடன் முழுவதும் முதலீடுகளாக மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறி வந்தனர். அது அப்பட்டமான பொய் என்பது இப்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. 2021&ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற திமுக அரசு 2025&ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.3.86 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. இந்தத் தொகையை மூலதன செலவுகளுக்காக மட்டுமே திமுக அரசு பயன்படுத்தியிருந்தால், ரூ.3.86 லட்சம் கோடி மதிப்புள்ள கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2021&22ஆம் ஆண்டில் ரூ.37,011 கோடி, 2022&23ஆம் ஆண்டில் ரூ.39,530 கோடி, 2023&24ஆம் ஆண்டில் ரூ.42,532 கோடி, 2024&25ஆம் ஆண்டில் ரூ.47,681 கோடி என மொத்தம் ரூ.1.66 லட்சம் கோடி மட்டுமே மூலதன செலவுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறந்த நிதி நிர்வாகத்தின் அடையாளம் என்னவென்றால், அரசின் வருவாய் செலவுகள் அனைத்தையும் வருவாய் வரவுகளுக்குள் கட்டுப்படுத்தி, மூலதன செலவுகளுக்கு மட்டும் கடன் வாங்குவது தான். அப்படியானால் மூலதன செலவுகளுக்கான ரூ.1.66 லட்சம் கோடிக்கும் கூடுதலாக வாங்கப்பட்ட ரூ.2.20 லட்சம் கோடி கடன் என்ன ஆனது? இந்த புள்ளிவிவரங்களையெல்லாம் நான் தயாரிக்கவில்லை. எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு 15.90% வளர்ச்சி அடைந்து விட்டது என்று திமுகவினர் மார்தட்டுகிறார்களோ, அதே ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தான் திமுகவின் இந்த அவலத்தையும் காட்டுகின்றன.