‘வாணியம்பாடி அருகே அகழாய்வுக்கு சாத்தியமான 2 இடங்கள் கண்டுபிடிப்பு’ | “2 Potential Excavation Sites Discovered Near Vaniyambadi”

1302669.jpg
Spread the love

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே அகழாய்வுக்கு உட்படுத்தக் கூடிய இரண்டு இடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன் காந்தி, வரலாற்று ஆர்வலர் காணி நிலம் மு.முனிசாமி, வாணியம்பாடியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கோ.சீனிவாசன் ஆகியோர் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, குட்டூர் கிராமத்தில் அகழாய்வு உட்படுத்தக் கூடிய 2 இடங்களை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர்.

இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் முனைவர் க.மோகன் காந்தி கூறியது: “தங்களுடன் கள ஆய்வில் தொடர்ச்சியாகப் பயணிக்கும் வாணியம்பாடியைச் சேர்ந்த சித்த வைத்தியர் சீனிவாசன் அவருக்கு கிடைத்திருக்கக் கூடிய பொருட்களை தங்களிடம் காட்டினார். அந்த பொருட்கள் ஏறத்தாழ 1000-த்திலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் புதையுண்ட பண்பாட்டு – நாகரீகத்தின் அடிச்சுவடுகளாய் விளங்குகின்றன.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டிற்கு அருகே குட்டூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சித்த வைத்தியர் சீனிவாசனின் வீட்டின் அருகேயுள்ள மண் பாங்கான பகுதியின் மேற்பரப்பில் நாங்கள் கள ஆய்வினை மேற்கொண்டோம். அப்போது கருப்பு, சிவப்பு, கருப்பு – சிவப்பு எனப் பலவகைப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தன. குறிப்பாக களி மண்ணால் செய்யப்பட்ட சுடு மண் குழாய்கள் பல உடைந்த நிலையில் கிடைத்தன. இவை இப்பகுதி சிறந்த நகர்ப் புறமாக இருந்ததற்கான சான்றாக உள்ளன.

முனைவர் க.மோகன்காந்தி

இது போன்ற குழாய்கள் கீழடியிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நத்தை மேடு பகுதியில் 7 செம்புக் காசுகள் கிடைத்துள்ளன. அவை தொல்லியல் துறைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை – கீழடி நகரம் போன்றே வாணியம்பாடி – வடக்குப்பட்டு கிராமமும் சிறந்த ஒரு நகரமாக பண்டைய காலத்தில் விளங்கியிருக்க வேண்டும். சிறந்த நாகரீகங்கள் ஆற்றங்கரை ஓரத்தில் தோன்றுவது வரலாற்று உண்மை.

கீழடி நாகரீகம் வைகை ஆற்றங்கரையோரம் தோன்றியிருப்பது போல, வாணியம்பாடி – வடக்குப்பட்டு நாகரீகம் பாலாற்றங்கரையில் தோன்றியுள்ளது எனக்கூறலாம். வடக்குப் பட்டிலிருந்து வடக்கே 2 கி.மீட்டர் தொலைவில் பாலாறு ஓடுவதை தாம் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த வடக்குப் பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரின் நிலத்திலும் ஏராளமான கருப்பு – சிவப்பு பானை ஓடுகள் கிடைத்தன.

முழு மற்றும் உடைந்த நிலையில் பழங்காலச் செங்கற்களும் இந்த நிலத்தில் ஏராளமாகக் கிடைத்தன. குறிப்பாக இரும்பை உருக்கிக் காய்ச்சியதனால் உண்டாகும் இரும்பு கசடுகள் (இரும்பு கிட்டாங் கற்கள் – Iron Slags) இங்கு ஏராளமாகக் கிடைக்கின்றன. இவை சங்க காலப் பொருட்களாய் இருக்க வாய்ப்புள்ளது. கீழடியில் நடைபெறும் அகழாய் வினைப் போல இந்த இரண்டு இடங்களிலும் ஆய்வுகள் நடத்தினால் தமிழரின் பண்டைய சிறப்புகளை நாம் மீட்டெடுக்கலாம்.

மேலும் எங்கள் ஆய்வுக் குழு அகழாய்வுச் செய்ய ஏற்ற இடங்களாக திருப்பத்தூருக்கு அருகேயுள்ள ‘அனேரி’ என்ற ஊரையும், ஜவ்வாது மலையிலுள்ள, ‘கல்லாவூரில்’ உள்ள கற்திட்டைக்குள்ளாக உள்ள பானைகளையும் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். இதை அரசு பரிசிலிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்று முனைவர் க.மோகன்காந்தி கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *