சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திரசேகர் என இரண்டு பேருமே அந்தத் தொகுதியை குறிவைத்து பணியாற்றி வருகிறார்கள்.
அங்கு தங்களுக்கு சீட்டை உறுதி செய்வதற்கு 2 பேரும் செய்து வரும் அதிரடி மூவ்கள், அவர்களுக்கு சீட் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக 2 கட்சிகளில் எழுந்துள்ள கலகக் குரல் ஆகியவற்றால் வடக்கு தொகுதி அதிரி புதிரி ஆகிக் கொண்டிருக்கிறது.

கோவை அதிமுகவினரிடம் பேசினோம், `சந்திரசேகர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே வடக்கு தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அப்போது எங்கள் கூட்டணியில் பாஜக வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதி உறுதி செய்யப்பட்டது.
அதனால் அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக அம்மன் அர்ஜுனன், வடக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார். சந்திரசேகருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் சந்திரசேகர் அதிருப்தியானார். கடந்த 2025 ஏப்ரல் மாதம் கட்சியை விட்டு விலகிய அவர், மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் கட்சியில் சேர்ந்தார்.