வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
சமூக மாற்றத்தின் சகாப்தமாக விளங்கிய 19ஆம் நூற்றாண்டில் அடிமை முறையை ஒழித்தல், பெண்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்குதல், சமூக சமத்துவம் போன்ற கொள்கைகளை வலியுறுத்தி துணிச்சலுடன் பல பெண்கள் போராடினர். அவர்களில் முதன்மையானவர் மடில்டா ஜோஸ்லின் கேஜ். எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, பேச்சாளர், பெண்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் எனப் பன்முகத் திறன்கொண்ட மடில்டா, தன் வாழ்நாள் முழுவதும் மனித சமத்துவம் மற்றும் பெண்களின் விடுதலைக்காக அயராது போராடினார்.
பெண்களின் அரசியல் உரிமை, அடிமை முறையை ஒழித்தல், பூர்வகுடி அமெரிக்கர்களின் உரிமை ஆகியவற்றிற்காக போராடிய மடில்டா மத நிறுவனங்களுக்குள் நிலவிய ஆண்களின் ஆதிக்கத்திற்கு எதிராக துணிச்சலாகக் குரல் கொடுத்தார். பெண்களின் சாதனைகள் ஒடுக்கப்படுவதை விமர்சித்து அவர் எழுதிய எழுத்துக்கள் பிற்காலத்தில், இவர் பெயர் கொண்டு “மடில்டா விளைவு (மடில்டா எஃபெக்ட்)” என்ற கோட்பாடு உருவாக காரணமாக இருந்தது .
மடில்டா ஜோஸ்லின் கேஜ், மார்ச் 24, 1826 அன்று அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலுள்ள சிசரோ நகரில் பிறந்தார். மருத்துவரான இவரது தந்தை ஹெசக்கியா ஜோஸ்லின் அடிமை முறை ஒழிப்புச் செயல்பாட்டாளராகவும், தாய் ஹெலன் லெஸ்லி ஜோஸ்லின் வரலாற்று ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தனர். தப்பி வரும் அடிமைகளுக்கு புகலிடம் வழங்கும் “நிலத்தடி இரயில்பாதை” (அண்டர்கிரவுண்ட் ரயில்ரோட்) இயக்கத்தின் ஒரு முக்கிய மையமாக மடில்டாவின் இல்லம் விளங்கியது.
மிகச் சிறு வயதிலிருந்தே சமூக அநீதியை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய உணர மடில்டாவின் குடும்பத்தில் நிலவிய சமூக நீதி பேணும் அறிவுசார் சூழல் காரணமாக அமைந்தது.