சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவம்பர் 4-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளயிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. தமிழகத்தில் நாளை (அக்.30-ம் தேதி) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் அக்.31 முதல் நவ.4-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், கனமழை பெய்ய வாய்ப்பில்லை.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை (அக்.30-ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 7 செ.மீ மழை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 6 செ.மீ மழை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 5 செ.மீ மழை, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, மாஞ்சோலை, கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.