வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | Heavy rain in 12 districts including Trichy Madurai Salem in Tamil Nadu tomorrow

Spread the love

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தீவிர புயல் ‘சக்தி’ நிலவுகிறது. இது நாளை அரபிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.5) பெரும்பாலான இடங்களிலும், 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 12 செமீ, திண்டுக்கல்லில் 11 செமீ, விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை, செம்மேடு, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் தலா 10 செமீ, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், தருமபுரியில் தலா 9 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், ஆரணி, மதுரை மாவட்டம் புலிப்பட்டி ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *