சென்னை: வங்கக் கடலில் நவ.22-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் நாளை முதல் நவ.23-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது நாளை (நவ.18) மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் நவ.22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை பெரும்பாலான இடங்களிலும், நவ.19 முதல் 23-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களிலும் 19, 20 தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 21-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், 22-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 23-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 12 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 9 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 8 செமீ, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழியில் தலா 7 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், புதுச்சேரி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது’ இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.