வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை | Red alert for 8 districts heavy rain in Tamil Nadu for next 3 days Meteorological Department

1380435
Spread the love

சென்னை: தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தஞ்சை, கடலூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வடதமிழக – புதுவை -தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேலும் மேற்கு வட மேற்கு திசையில் வடதமிழக புதுவை தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்.

நேற்று தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது இது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெறக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று ( அக்டோபர் 21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதி கனமழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை ( அக்டோபர் 22) விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 23-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

24-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 25 முதல் 27-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

சென்னையை பொருத்தவரை இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதேபோல சென்னையில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *