நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்க இருக்கிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த “ஆபரேஷன் சிந்தூர்”, அதிபர் டிரம்ப்பின் இறக்குமதி வரிவிதிப்பு, பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்னைகள் எழுப்பப்படும் என்பதால், வழக்கத்தைவிட இந்த நாடாளுமன்றத் தொடர் பரபரப்பாக இருக்கப் போகிறது. மழைக்காலக் கூட்டத்தொடர் அமளிகளில் மூழ்கி விவாதங்கள் இல்லாமல் நடைபெறக்கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு (பிரார்த்தனை).
மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவருமான ஜெ.பி.நட்டா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், “ஆபரேஷன் சிந்தூர்” உள்பட எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து முக்கியமான பிரச்னைகள் குறித்தும் விதிமுறைகள், மரபுகளின் அடிப்படையிலான விவாதத்துக்கு ஆளுங்கட்சித் தரப்பு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் உள்ள 54 கட்சிகளின் பிரதிநிதிகளும், சுயேச்சை எம்.பி.க்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முந்தைய தினம் கூடிய 24 எதிர்க்கட்சிகளின் செயல்திட்டக் கூட்டத்தில், முக்கியமாக எட்டு பிரச்னைகளை எழுப்புவது என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை சட்டத்தின்முன் நிறுத்தாதது, அந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள், தனது தலையீட்டின் காரணமாகத்தான் “போர் நிறுத்தம்’ ஏற்பட்டது என்கிற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்து, பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்புவது என்று அந்தக் கூட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் எழுப்புவதற்கு மேலும் பல பிரச்னைகள் இருக்கின்றன. குறிப்பாக விலைவாசி உயர்வு, விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமான வேளாண் இடர், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளும் நடைபெற இருக்கும் மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்ப இருக்கும் ஏனைய சில முக்கியமான பிரச்னைகள்.
முக்கியமான பிரச்னைகளை விவாதிப்பதற்காகத்தான் ஜனநாயகத்தில் நாடாளுமன்றம் என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரச்னையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அதன் பிறகு பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நிறைவேற்றப்படுவது என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை. எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு ஆளுங்கட்சி செவிசாய்ப்பது என்பதும், ஏற்புடையதாக இருந்தால் தகுந்த மாற்றங்களுடன் தனது பெரும்பான்மை பலத்தால் நிறைவேற்றிக் கொள்வது என்பதும்தான் எதிர்பார்ப்பு.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக, குறிப்பாகக் கால் நூற்றாண்டாக, இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும், அதையே காரணமாக்கி விவாதம் இல்லாமல் மசோதாக்களை அரசு நிறைவேற்றிக் கொள்வதும் வழக்கமாகவே மாறிவிட்டிருக்கிறது. 17}ஆவது மக்களவையின் 15 கூட்டத்தொடர்களில் 11 கூட்டத்தொடர்கள் முறையாக செயல்படாமல் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது என்பதை வேதனையுடன் பதிவு செய்யத் தோன்றுகிறது.
ஆளுங்கட்சித் தரப்பின் கருத்துகளால் பொறுமை இழப்பதும், ஆத்திரத்தில் அமளியில் இறங்குவதும், கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி அவை ஒத்திவைப்புக்குக் காரணமாக இருப்பதும் எதிர்க்கட்சிகளின் பலவீனம். தங்களது வாதத் திறமையால் தனிப்பெரும்பான்மை பலத்துடன் திகழ்ந்த ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி அரசுகளுக்கு சிம்ப சொப்பனமாகத் திகழ்ந்த ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி, ஜோதிர்மாய் பாசு, பூபேஷ் குப்தா, ஹிரேன் முக்கர்ஜி (இடதுசாரிகள்), ராம் மனோகர் லோகியா, ஆச்சார்ய கிருபளானி, மது பிமாயி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் (சோஷலிஸ்ட்), அடல்பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி (பாஜக), மட்டுமல்லாமல் பிலு மோடி, எஸ்.சந்திரசேகர் போன்றவர்களின் ஆளுமைத்திறன் இன்றைய எதிர்க்கட்சி வரிசைத் தலைவர்களுக்கு இல்லாமல் இருப்பது இந்திய ஜனநாயகத்தின் துரதிருஷ்டம்.
“ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த நியாயமான கேள்விகளுக்கு அரசு பதில் அளிப்பது அவசியம். அதேநேரத்தில், இந்தியாவை உலக அரங்கில் பலவீனப்படுத்தாத விதத்தில் அரசின் மீதான தங்களது தாக்குதலை அமைத்துக் கொள்வது எதிர்க்கட்சிகளின் கடமையும்கூட. ஏர் இந்தியா விமான விபத்து குறித்த அறிக்கை உள்ளிட்ட பல கேள்விகள் கூட்டத்தொடரில் எழுப்பப்பட்டு, அவை குறித்த விளக்கங்கள் மக்கள் மன்றத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
விலைவாசி உயர்வு, ஆங்காங்கே பாலங்களும் கட்டடங்களும் சீட்டுக்கட்டு போலத் தகர்ந்து விழும் அவலம், சுங்கம் வசூலிக்கப்படும் நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கும் சீர்கேடு போன்றவை குறித்துக் கேள்வி எழுப்பவும், அரசிடம் இருந்து தகுந்த பதில் வரவழைக்கவும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பாக இன்று தொடங்க இருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடர் பயன்படுத்தப்பட வேண்டும்.
தங்களது வாதத்தாலும், விமர்சனங்களை முன்வைக்கும் திறமையாலும் ஆளுங்கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதும், தவறுகளுக்குப் பொறுப்பேற்க வைப்பதும்தான் எதிர்க்கட்சிகளின் சாமர்த்தியமாகக் கருதப்படும். கூச்சல், குழப்பத்தையும், அமளியையும் ஏற்படுத்தி அவைகள் முடக்கப்படுவதால் எவ்விதப் பலனும் இல்லை. ஆளுங்கட்சியின் எதிர்பார்ப்பும் அதுதான் என்பதை எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தியின் காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.