வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு | 2 dead in Valparai house collapse due to heavy rain

1287659.jpg
Spread the love

பொள்ளாச்சி: வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக இடைவிடாமல் மழை பெய்கிறது.

இந்நிலையில், வால்பாறை வட்டாரத்தில் நேற்று இரவு முதல் இன்று (ஜூலை 30) காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இருந்து சோலையார் அணை இடது கரை செல்லும் பகுதியில் முத்து என்கின்ற ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான மண்சுவர் வீடு அதிகாலையில் இடிந்து விழுந்தது இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்த அவரது பேத்தி தனபிரியா (14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காலையில் அவ்வழியாகச் சென்றவர்கள் வீடு இடிந்து கிடப்பதை கண்டு சென்று பார்த்த போது இடிபாடுகளுக்கு இடையே இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்த உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேக்கல் முடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *