வால்பாறை, பொள்ளாச்சியில் மழை காரணமாக மூவர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு | Three killed due to rain in Valparai, Pollachi: CM Stalin’s condolence

1287691.jpg
Spread the love

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் ஏற்பட்ட இருவேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், “கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே இன்று (30.7.2024) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (எ) முத்து (வயது 57) மற்றும் செல்வி தனப்பிரியா (வயது 15) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், திப்பம்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான ஓட்டு வீட்டின் மேற்குப்பக்கச் சுவர் இன்று (30.07.2024) பெய்த மழையினால் அதிகாலை சுமார் 3.00 மணியளவில் இடிந்து மேற்குப்பக்க ஓட்டு வீட்டின்மீது விழுந்ததில் வீட்டினுள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஹரிஹரசுதன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த இருவேறு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *