வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

Spread the love

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9

 – மதுகேசவ்  பொற்கண்ணன்

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந் தேர்க்கு/ அச்சாணி அன்னார் உடைத்து” (குறள் 667)

என்று நமக்கு வாழ்க்கைப் பாதையை உணர்த்துகின்றார் வள்ளுவர்.

 பெரும்பாலானப்  பழையத் திரைப்படங்களில், நகைச்சுவைக் காட்சி என்ற பெயரில், மனிதர்களை மனிதர்கள் கேலி செய்து, கிண்டல் செய்து அவர்களது அவையங்களைக் குறித்து நகைச்சுவையாகப் பேசுவதாக எண்ணி, பல காட்சிகளை வைத்திருப்பார்கள். இதனை உருவ கேலி என்று கூறலாம். அது ஏதோ நகைச்சுவைக்காக நடிப்பு என்று எளிதாக புறந்தள்ளக்கூடியது அல்ல. புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர்கள் கூட இதில் விதிவிலக்காக இருந்ததில்லை. நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி போன்றவர்களும் மற்றும் சிலரும் ஏதாவது ஒரு துணை நடிகரின் உருவத்தை வைத்து, அவருடைய மெய்,வாய், கண்,மூக்கு, செவி போன்ற அவையங்களின் குறைபாடுகளை வைத்து சிரிப்புக்காகக் கேலி செய்து காட்சிகள் வைத்திருப்பார்கள். ஆனால் இந்தத் திரைப்படங்களைப் பார்க்க வருகின்ற மாற்றுத்திறனாளிகளுடைய மனது எந்த அளவுக்குப் புண்படும் என்பதை  உணருவதில்லை. 

ஆனால் மனித உரிமைப் பாதுகாப்பு  மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கங்கள் போன்றவற்றினுடைய கோரிக்கைகளை ஏற்று, திரைப்படத் தணிக்கைத் துறையும் இதனைக் கண்காணித்து வருவதாலும், மனிதர்களின் உருவ கேலிக்கு மட்டுமல்லாமல், பறவைகள், விலங்குகள் ஏதும் துன்புறுத்தப்பட வில்லை என்கின்ற  உத்தரவாதமும் அளித்தால்தான், திரைப்படங்களை வெளியிடுவதற்கு தணிக்கைச் சான்று கிடைக்கும் என்கின்ற நிலை இருக்கின்ற காரணத்தினால், தற்போது அது போன்ற நகைச்சுவைக் காட்சிகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன என்பது ஆறுதலளிக்கின்றது.

ஒருவருடைய மனது புண்படும் பொழுது அது அவருடைய வளர்ச்சியை,  முன்னேற்றத்தை, அவருடைய சிந்திக்கும் திறனைத் தடுத்துவிடும் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனது பள்ளித் தோழன் ஒருவன் எப்போதும் ஒரு ஆசிரியரை அவரது நடையை வைத்து அவரது உருவத்தை வைத்து பட்டப்பெயர் வைத்து அழைத்து கேலி செய்வது வழக்கம். ஆனால் எத்தனை முறை கூறியும் அவனதை உணரவில்லை. ஆனால் அவனுக்கும் அதே பாதிப்பு பிந்நாளில் ஏற்பட்டப்  பின்புதான் அந்த கேலியின் வலியை அவன் உணர்ந்தான்.

 மனிதர்களின் நடைமுறைப் பழக்க வழக்கங்களில் மிகவும் மோசமானது உருவ கேலி மட்டுமல்ல; வேறு எந்த வகையான கேலியும் கிண்டலும்; அவர்களே அறியாமல் செய்து கொண்டிருப் பார்கள்; ஏதாவது ஒரு சமயத்தில் அவர்களே அந்த கேலிக்கு ஆளாகும் போதுதான் அதனுடைய வலியை அவர்களால் உணர முடியும். சிலர் பட்டப்பெயர் வைத்து கேலி செய்வார்கள்; கோட் வேர்ட் போல பேசிக்கொள்ள பயன்படுத்துவார்கள். பல அலுவலகங்களில் இன்றும் கூட பட்டப்பெயர் வைத்து அடையாளப்படுத்தும் வழக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு செய்வது அவர்களை எந்த எல்லைக்கு இட்டுச் செல்லும் என்றால் அவர்களின் எதிர்காலமே பாதிக்கும் அளவுக்குக் கொண்டு சென்று விடும்.

ஒரு அலுவலகத்தில், ஒரு அதிகாரிக்கு சிலர் தன்னைப் பட்டப்பெயர் வைத்து அழைத்து, கேலி செய்கிறார்கள் என்பதை அவருடைய ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்டு விட்டார். இதை மனதில் வைத்திருந்த அவர், அந்தப் பிரிவில் உள்ளவர்களுக்குத் தரப்பட வேண்டிய பதவி உயர்வு ஃபைலைத் திருப்பித் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தாரே தவிர, அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை; காரணமே புரியாமல் இருந்தது; விளையாட்டாக இவர்கள் பட்டப்பெயர் வைத்து அழைத்தது தங்களுடைய எதிர்காலத்தை பாதித்தது; அவர்கள் அறியாமலேயே பலியாகிவிட்டனர். இப்படி , பட்டப் பெயர் வைத்துக் கேலி செய்ததன்விளைவு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமலேயே போய்விட்டது. ஒருவரது உணர்வுகளுடன் விளையாடும் போது தங்களுக்கு இது ஆபத்தாக முடிந்து விடும் என்பதையே இது காட்டுகிறது. இதைத்தான் “விளையாட்டு வினையாக முடியும்” என்பார்கள்.

ஒரு சமயம் அறிஞர் பெர்னாட்ஷாவைப் பார்க்க ஒரு இளம் பெண் வந்து இருந்தாள். அந்தப் பெண்ணுக்கு தனது அழகின் காரணமாக, பெர்னாட்ஷாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை. பெர்னாட்ஷா இந்த பெண்ணை எப்படித் தவிர்ப்பது என்று தெரியாமல், ஏன் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறாய்? என்று கேட்டார். அதற்கு அந்தப்பெண், என்னைப் போல் அழகான  உங்களைப் போல் அறிவுள்ள ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று தன்னுடைய அழகின் மீது அத்தனை கர்வத்துடன் பெர்னாட்ஷாவினுடைய உருவத்தின் மீது ஒருவித கேலி இருப்பதை உணர்ந்தார் பெர்னாட்ஷா. எனது உருவத்துடனும் உனது அறிவுடனும் குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது?  என்று கூறி அந்தப் பெண்ணைத் திருப்பி அனுப்பி விட்டார். உருவத்தை மட்டுமல்ல அறிவாற்றலையும் கேலி செய்கின்ற ஒரு தொனி அதில் இருப்பதை உணர்ந்து அந்தப் பெண்ணும் மனம் திருந்தினார்.

நம்மை அறியாமலேயே நாம் செய்கின்ற ஒரு கேலிக்கு நாம் பலியாகி விடக்கூடாது என்ற மன உறுதியைக் கொண்டு, மற்றவர்கள் எவரும் இவ்வாறு செய்தாலும் அவர்களையும் தடுப்பதை ஒரு கடமையாகக் கொண்டு, எவ்வகையான கேலி கிண்டலையும், குறிப்பாக உருவ கேலியையும் தவிர்த்தால் வாழ்வின் உன்னத தருணங்கள் தானே உருவாகும்.

வீடுகள், உறவினர்கள், நண்பர்கள், அலுவலகங்கள், தொழில் செய்யும் இடங்கள், பொது இடங்கள்  என்று எங்கெங்கும் நகைச்சுவை உணர்வு இருக்கட்டும்; ஆனால்  கிண்டல் என்கின்ற பெயரில், உள் மனத்தின் உணர்வுகளைப் பாதிக்கும் கேலிகள்  இல்லாமல் நல்ல உரையாடல்களாகப் பேசினால் –  என்றென்றும் “லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்” தான்.


மதுகேசவ்  பொற்கண்ணன்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *