வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே: 2 – Kumudam

Spread the love

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே: 2

– மதுகேசவ் பொற்கண்ணன்

வாழ்க்கையின் சுவாரசியம் எதில் உள்ளது? ஆயிரம் கோடி சொத்துகளிலா? பிஎம்டபிள்யூ… பென்ஸ் எனும் உயர் ரக கார்களிலா? 5 கோடி 10 கோடி  ரூபாய் மதிப்புள்ள வாட்சுகளா? நெய் வடியும் விதவிதமான உணவு வகைகளிலா? உல்லாச கேளிக்கைகளிலா? எது வாழ்வின் சுவாரஸ்யம்.

ஒரு வயது குழந்தையால் தன் அம்மாவைப் பார்க்காமல் ஒரு பத்து நிமிடம்கூட இருக்க முடியாது. அதே இளைஞன் தன் காதலியைக் காண தவியாய் தவிக்கிறான். அப்பாவின் எதிர்பார்ப்பு, மகன் மகள் வளர்ச்சியில்.  ஆம்,  நண்பர்களே! அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா, மாமா அத்தை, தாத்தா,  பாட்டி, அண்ணன், தம்பி, தங்கை, மாமன்  மச்சான்… என்று உறவுகளே வாழ்வின் சுவாரஸ்யம். உறவுகளே உன்னதம்!

மனிதன் எவ்வாறு அடையாளப் படுகிறான்? அவனுக்கு ஒரு பெயர் இருக்கும். உதாரணமாக… அவன் பெயர் மகேஷ் என்று இருக்கலாம். ஆனால், மகேஷ் தனித்து அடையாளம் பெறுவது கிடையாது. அவனது அப்பாவுக்கு அவன் மகன்; அம்மாவுக்கும் மகன்; அவனுக்கு முன் உடன் பிறந்தவர்களுக்கு அவன் தம்பி; அவனுக்குப் பின் பிறந்தவர்களுக்கு அவனே அண்ணன்; அவனது அப்பா – அம்மாவின் பெற்றோர்களான தாத்தா – பாட்டிக்கு அவனே பேரன்; இப்படித்தான் மகேஷ் அடையாளப்படுத்தப்படுகிறான்.

பள்ளியில் சேர்க்கச் சென்றால்கூட பெயர் மகேஷ்; சரி, எந்த மகேஷ்?  என்றால், அவன் தந்தையின் பெயரை கூறித்தான் அவன் பள்ளியில் முதல் அடையாளம் பெறுகிறான். பள்ளியில் அவனுக்கு நண்பர்கள் கிடைத்ததும் நண்பர்கள் மூலம் அடையாளப்படுகிறான். இப்போது மகேஷிடமிருந்து ஒவ்வொரு உறவாக இல்லை என்று எடுத்துவிட்டால், இறுதியில் மகேஷுக்கு என்று தனி அடையாளமே இல்லாமல் தனித்து நிற்பான்.

சமூகத்தில் பெறுகிற அடையாளம் யாவுமே உறவின் வழியாகத்தான்! திருமணமான பின் மனைவியின் பெயரைக் கூறி… அவளது கணவன் மகேஷ் என்பார்கள்; குழந்தைகள் பிறந்ததும் அவனே அப்பா ஆகிவிடுவான்; பேரன்கள் பிறந்ததும் தாத்தா என்று முதிய உறவாக அடையாளப் படுவான்; ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒன்றுதான். உறவின் வழியாக மட்டுமே அடையாளப்படுத்தப் படுவார்கள்.

சித்தப்பா தன் அண்ணன் மகன் என்பார்; பெரியப்பா  என் தம்பி மகன் என்பார்; மாமா தன் சகோதரியின் மகன் என்பார்; அத்தை தன் சகோதரனின் மகன் என்பாள்; இப்படி உறவால் அடையாளப்பட்டுக் கொண்டே… அந்த உறவுகளை வெறுத்தால் வாழ்க்கை இனிக்குமா? கசக்குமா? உறவுகளை வெறுக்காமல், உறவுகளை தன்னளவில் மதித்தாலே போதும், உறவுகளில் விரிசல் வராது; அன்புதான் வளரும்!

“சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்” என்பது அவ்வை வாக்கு! உறவை வளர்க்க அதிகம் சிரமப்பட வேண்டாம். சிறிய விஷயங்களை பெரிதாக்காமலும்… ஒருவர் கூறுவதை பிறரிடம் கூறாமல் இருப்பதுமே முதல் வழி. 

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள்” அதுதான் தாரக மந்திரம். ஒவ்வொருவரிடமும் உள்ள ஈகோவை நீங்கள் தொடாத வரை உங்கள் உறவு உங்கள் கையில். அதற்கு முதலில் நாம் ஈகோ இல்லாமல் இருக்கப் பழக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் சுயமரியாதை, மானம், அவமானம் என்று ஏதேதோ வார்த்தைகளைப் பேசி தன்மானத்தை உசுப்பி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். அதனைக் கண்டுணர்ந்து புறந்தள்ள பழகினால் போதும்.

ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருந்து பாருங்கள். நீங்கள் ஒருவருக்கு உதவுவதற்கு ஓர் அடி எடுத்து வைத்தால்… அவர் உங்களுக்காக ஓடோடி வருவார்.

“நிதி மிகுந்தவர் பொற்குவைதாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்; அதுவும் இல்லாதவர் சொற்குவை தாரீர்” என்கிறான் பாரதி! ஆம், சொற்களால் நீங்கள் கூறும் ஒரு சில வார்த்தைகள் அவரது பிரச்னைகளில் இருந்து விடுபட்டு ஆறுதல் அடையச் செய்யும். அவர் தனது வாழ்க்கையை வாழ்ந்துவிட உங்களின் ஒரு சில சொற்கள் போதும்.

உங்களின் சொற்களே… உங்களின் உயிர் நாடி. அதில் நல்ல சொற்கள் வந்தால் நாளும் நீங்களும் மகிழலாம்; கேட்பவரும் மகிழ்வார்கள். உங்களின் நற்செய்கையும் நற்சசொல்லுமே அவர்களை மகிழ்வூட்டும். அது போதும். 

”நமது உடலில் உள்ள நவ துவராங்களின் வழியாக  வெளியே றுபவை… நறுமண மற்றவை. நமது வாயிலிருந்து வெளியேறும் சொற் களாவது நறுமணமாக இருக்க வேண்டாமா? உங்கள் அன்பு வாயிலிருந்து வெளியேறும் சொற்களை நறுமணம் ஆக்கும்” என்றார் புத்தர்.

எதிர்பார்ப்பு இல்லாமல் உறவுகளிடம் பழகுங்கள். அப்போது புரியும் மகிழ்ச்சி என்றால் என்ன என்று?

எதற்கெடுத்தாலும் குற்றம் காணும் மனோபாவத்திலிருந்து வெளியில் வந்து, உறவுகள் நட்புகள் செய்யும் நல்லவற்றை உற்சாகப்படுத்துங்கள். நட்பும் உறவும் என்றும் நிலைத்து நிற்கும். உறவுகள் சுமூகமாக இருந்தால் உங்கள் மனம் அழுத்தமின்றி இயல்பாக இருக்கும். உங்கள் மனம் இயல்பாக இருந்தால் உங்கள் பணிகளில் தொழில்களில் ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும். வெற்றி காண முடியும். வாழ்வில் முன்னேற முடியும். உண்மையாகப் பழகுங்கள்; உண்மையாகப்  பேசுங்கள்; உங்களிடம் உண்மை இருப்பது உறுதியானால் உறவுகள் உங்களைத் தேடி வரும் நீங்கள் தேடாமலே!

ஒவ்வொரு உறவுகளிடமும் அக்கறையாக இருங்கள். அவர்களின் மனக்குறைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள். இன்றைய நாளில் பலர் poor receiver ஆ கவே இருக்கிறார்கள். மற்றவர்கள் பேசுவதற்கு காது கொடுப்பதே இல்லை. ” ஒரு மணி நேரமாக என்னைப்பற்றி நானே பேசி பேசி எனக்கு வாய் வலிக்கிறது… இனமே நீ என்ன பற்றி பேசு நான் கேட்கிறேன்” என்றானாம் ஒருவன்.  இப்படித்தான் இருக்கிறது பலரது உரையாடல். நட்பில் சொந்தத்தில் உறவுகளில் உரையாடலின் பங்கு மிக மிக முக்கியமானது  என்பதை உணருங்கள். Good ரெஸிவேர் ஆகவே இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களால் மற்றவர் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்க முடியாவிட்டாலும், அக்கறையுடன் கேட்பதே அவர்களுக்கு பாதி பிரச்னை தீர்ந்ததாகிவிடும்.

ஃபாஸ்ட் ஃபுட் உலகில் நிதானமாகச் செயல்படுவது கடினம்தான். முயன்று பாருங்கள். முகமும் மலரும். அகமும் மகிழும். உறவே உங்களின் அடையாளம். உறவுகளிடமிருந்து எவ்வளவு தூரம் நீங்கள் விலகிச் செல்கின்றீர்களோ.. அவ்வளவு தூரம் உங்களின் அடையாளமும் மகிழ்வும் உங்களை விட்டுச் செல்லும். 

‘ என் பக்கத்து வீடு வெகு தூரத்தில் இருக்கிறது ‘ என்றொரு கவிதை எழுதி இருந்தார் கவிஞர் துரை வசந்தராசன். நட்புக்கான உறவுக்கான இடைவெளியை சுட்டிக்காட்டும் அற்புதமான கவிதை இது. உறவு நட்போ உங்கள் மனசுக்கு பக்கத்தில் இருப்பது மாதிரி நீங்கள் நடந்து கொண்டால் அவர்களும் உங்கள் மனசுக்கு பக்கத்தில் எப்போதும் இருப்பார்கள்.

“இரவுக்கு ஆயிரம் கண்கள்…பகலுக்கு ஒன்றே ஒன்று; அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று;”- என்ற கண்ணதாசன் வரிகள்தான் எத்தனை அழகானவை! ஆழமானவை! அறிவு ஆயிரம் வழிகளில் யோசனை செய்யும்; ஆனால், உறவுக்கு ஒரே சிந்தனை… அன்பு மட்டும்தான். உங்களுக்காக, உங்கள் மகிழ்ச்சிக்காக, உங்கள் உயர்வுக்காக, உங்கள் அமைதிக்காக, உங்களின் நன்மைக்காக உறவுகளிடம் மகிழ்வாகவும் அன்பாகவும் பழகுங்கள். வாழ்க்கை என்பதே சுவாரசியமாகிவிடும். அப்புறம் என்ன லைப் இஸ் பியூட்டிஃபுல் என்பீர்கள்!


             
மதுகேசவ் பொற்கண்ணன்

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *