வா வாத்தியார்: “என் முதல் படத்துக்கே தடங்கல்… இது எனக்குப் புதிதல்ல" – நடிகர் கார்த்தி

Spread the love

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் நிதி பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நாளைப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் ராஜா, நடிகர் சத்யராஜ், நடிகை க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் கார்த்தி, “கடந்த வருடமே இந்தப் படத்தை வெளியிடப் பெரிதும் முயன்றோம். ஆனால், தடங்கல் ஏற்பட்டுவிட்டது. எனக்கு தடங்கல் ஏற்படுவது புதிதல்ல.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி

என் முதல் படமும் தடங்களுக்குப் பிறகுதான் ரிலீஸ் ஆனது. ஞானவேல் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் நிம்மதியுடன் இருங்கள். அதுதான் முக்கியம். எல்லாப் போராட்டத்திலும் வெற்றிப்பெற்றுவிட வேண்டும் என ஓடிக்கொண்டிருப்பதால் ஆரோக்கியத்தை விட்டுவிடுகிறோம். எனவே, ஆரோக்கியம் முக்கியம் என அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

ஒவ்வோர் அரிசியிலும் அந்த அரிசிக்குரியவர் பெயர் இருக்கும். அதுபோல சினிமாவில் ஒவ்வொரு பிரேமிலும் யார் இருக்க வேண்டும் என சினிமா தீர்மானித்திருக்கும் என அப்பா அடிக்கடி சொல்வார். படம் நடித்து முடித்தப் பிறகுகூட தியேட்டரில் படம் வருமா என்பதும் தெரியாது. ஏற்கெனவே நிறைய விஷயங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல கதை அதற்குத் தேவையான ஒரு டைரக்டரையும், தயாரிப்பாளரையும், நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும், அதுவே தேர்வு செய்துகொள்ளும்.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி

அதற்கு ஏற்றதுபோலவே லோகேஷனும் அமையும். எனவே, இந்த நிர்ணயித்தலை நம்பினால் நிம்மதியாக இருக்கலாம். இதுபோல தாமதங்கள் வரும்போது பதற்றம் அடையத் தேவையில்லை. ஒரு திட்டத்தில் அதுவே எல்லாம் நடக்கும். அந்த வகையில் இந்தப் படம் பெரும் தாமதம், போராட்டத்துக்குப் பிறகு திரைக்கு வருகிறது. நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். குறிப்பாக என் அண்ணா சூர்யாவுக்கு. அவருடைய பெரும் ஆதரவு இந்தப் படத்துக்கு உதவியாக இருந்தது.

நலன் இங்கு வரவில்லை. அவர் திருவண்ணாமலை கோயிலில் இருக்கிறார். இந்தக் கேரக்டரில் நடிப்பதற்கு பெரும் பயம் இருந்தது. அதற்காக பெரிய ஹோம்வொர்க், ஹார்ட்வொர்க் செய்து, எம்.ஜி.ஆர் படங்களை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டுவர முயற்சி செய்தேன். என் முகத்தை என்னாலேயே கொஞ்ச நேரம் பார்க்க முடியாது. அதில் அவர் முகத்தைப் பொருத்த பயமாக இருந்தது. உண்மையிலேயே அவர் சூப்பர் ஹீரோ. திரையிலும், திரைக்கு வெளியிலும் ஹீரோவாகவே வாழ்ந்து சென்றிருக்கிறார். அவருடைய நினைவிடத்துக்கு இன்று காலை சென்றிருந்தோம். அது வேறு ஓர் உணர்வு. அவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அதே ஈர்ப்புடன் இருக்கிறார்.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி

சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தை வேறு ஓர் இடத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறார். சத்யராஜ் மாமா இந்தப் படத்தில் நான் நடிப்பதால் மட்டுமே நடித்தாகச் சொன்னீர்கள். உங்களின் நம்பிக்கையை நாங்கள் எங்கும் வீணாக்கவில்லை என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன். நடிகை க்ரீத்தி ஷெட்டியும் அற்புதமான நடிகை. அவரின் மெனெக்கெடல் அவரை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். இந்தப் படத்துக்கும், எனக்கும் உங்கள் எல்லோரின் ஆதரவும் வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *