திடீரென “வா வாத்தியார்’ படமும் பொங்கலுக்கு களத்தில் குதித்து விட்டது. கடன் பிரச்னைகளால் தவித்து மூச்சுத்திணறிக் கொண்டிருந்த படம், ஜனவரி 14 வெளிவருகிறது. சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி. எப்படி ‘வா வாத்தியார்’ வெளியாகும் சூழல் உருவானது என்று அவரிடமே கேட்டோம்.
“எங்கள் ஆபீஸில் ஒரு படம் இருந்தது. எம்.ஜி.ஆர் ஒரு பேனாவை வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டு இருப்பது மாதிரியான ஒரு போஸ் கொடுத்திருப்பார். அந்தப் படம் வேறு எங்கேயும் காணப்படவே இல்லை. அதைப் பார்த்தால் கலைஞர் மாதிரியே வாத்தியாரும் எழுத்தாளர் மாதிரியே தோன்றுவார். அந்தப் படம் கதை டிஸ்கஷன் பண்ணும்போது இருக்கும்.

வாத்தியார் ஆச்சு, அவர் படம் ஆச்சுன்னு இருப்போம்
நாங்கள் இது மாதிரி பிரச்னைகள் வரும்போது, `பொறுப்பு நம்முடையது இல்லை. வாத்தியார் ஆச்சு, அவர் படம் ஆச்சு’ என்று பேசிக்கிட்டே இருப்போம். படத்தின் நடுவிலேயே நிறைய முட்டல், மோதல், சேலஞ்ச் இருக்கும். அப்போதும் வாத்தியாருக்கும் இதில் பொறுப்பு இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது எங்களுக்குள்ளே நடக்கும். நாமே எல்லாத்தையும் பண்ண முடியுமா, அவரும் இறங்கிப் பண்ணனும்னு சொல்லுவோம். என்ன தலைவர், என்ன பிளான் வச்சிருக்கார் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கார்ன்னு பேசுவோம். ரிலீஸ்னு செய்தி கேட்டதும், என்னடா தலைவருக்கு நியூஸ் போயிடுச்சான்னு நினைச்சோம்.