ச.தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் 27.5.1954-ல் பிறந்தவர். இவரது தாத்தா, மதுரகவி பாஸ்கரதாஸ் பிரபலமான நாடகவியலாளர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் ஆசிரியர். அப்பா எம்.எஸ்.சண்முகம் எழுத்தாளர். பல திராவிட இயக்க இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன, அம்மா பெயர், சரஸ்வதி. எழுத்தாளர் கோணங்கி, நாடகவியலாளர் முருகபூபதி ஆகியோர் தமிழ்ச்செல்வனின் சகோதரர்கள்.
குடும்பத்தில் இயல்பாக இருந்த வாசிப்புப் பழக்கம் சிறுவயதிலேயே தமிழ்ச்செல்வனையும் தொற்றிக்கொண்டது. தொடர் வாசிப்பு, எழுதும் வேட்கையைத் தூண்டியது. இவரது முதல் கவிதை ‘நீலக்குயில்’ என்ற சிறுபத்திரிகையில் வெளிவந்தது. முதல் சிறுகதை, ‘தாமரை’ இதழில் வந்தது. அஞ்சல் துறையில் பணியாற்றிய தமிழ்ச்செல்வன், பிறகு ராணுவத்தில் இணைந்து இந்திய-சீன எல்லையில் பணி புரிந்தார். பிறகு ராணுவத்தில் இருந்து வந்து அஞ்சல் துறையில் இணைந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று ஏராளமான இளைஞர்களை அந்த அமைப்பு நோக்கி ஈர்த்ததில் தமிழ்ச்செல்வனின் பங்கு அளப்பரியது. அறிவொளி இயக்கத்திலும் பங்கேற்று கிராமம் கிராமமாகப்போய் கற்றலின் தேவை குறித்து விழிப்புணர்வூட்டினார். அதற்கென சிறு சிறு நூல்களையும் ஏராளமான பாடல்களையும் எழுதினார் தமிழ்ச்செல்வன். இயக்கப் பணிகளுக்காகவே அஞ்சல் துறைப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

ச.தமிழ்ச்செல்வனின் மனைவி பெயர் இரா.வெள்ளதாய். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மகன் சித்தார்த் சென்னையில் வசிக்கிறார்.
தமிழ்ச்செல்வனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘வெயிலோடு போய்’. 1984-ல் வெளிவந்தது. மனித உணர்வுகளை அதன் இயல்பில் உயிர்ப்போடு காட்சிப்படுத்தும் எழுத்து தமிழ்ச்செல்வனுடையது. அதற்காகவே அந்தத் தொகுப்பு பெரிதும் பேசப்பட்டது. அந்தத் தொகுப்பில் இடம்பெற்ற ‘வெயிலோடு போய்’ சிறுகதையை திரைப்பட இயக்குநர் சசி, ‘பூ’ என்ற பெயரில் படமாக்கினார். அப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்தப் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது ச.தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டது.