விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி | Election Commission registers Tamilaga Vettri Kazhagam as political party, says actor Vijay

1308293.jpg
Spread the love

கள்ளக்குறிச்சி: விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் செப்டம்பர் 23-ம் தேதி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரினர். இதையடுத்து, 21 கேள்விகளுக்கு 5 நாட்களில் பதில் அளிக்குமாறு விக்கிரவாண்டி போலீஸார் அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, காவல் துறை கேட்டிருந்த கேள்விகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கடந்த 6-ம் தேதி பதில் கடிதம் அளித்தார். பின்னர்,இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விக்கிரவாண்டி போலீஸார் தற்போது 33 நிபந்தனைகளுடன் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதி கடிதத்தை கட்சியின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜியிடம் விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் வழங்கினார்.

மாநாட்டுக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தவெகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

‘‘சீல் வைத்து வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகளை தலைவர் விஜய் வெளியிடுவார்’’ என்று கட்சி நிர்வாகிகள் கூறினர்.

தொண்டர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி: இதற்கிடையே, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் தவெக இடம்பெற்றுள்ளதாக கட்சித் தலைவர் நடிகர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்துநேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படை கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவித கொள்கை கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்துக்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமான பதிவுக்காகவுமே காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய, கடந்த பிப்ரவரி 2-ம் தேதி இந்தியதேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதை சட்டப்பூர்வமாக பரிசீலித்த தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கியுள்ளது. இதை உங்களோடுபகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திசைகளை வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதல் கதவு நமக்காக திறந்திருக்கிறது. இந்த சூழலில், நமது கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளை தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களை சந்திப்போம். வாகை சூடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பதிவு செய்த கட்சியாக அறிவிக்கப்பட்டிருப்பது, முதல் மாநாட்டுக்கு அனுமதி கிடைத்திருப்பது என இரட்டை மகிழ்ச்சியில் உள்ளதொண்டர்கள், தமிழகம் முழுவதும் நேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *